தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படித்து உயர் கல்விக்கு செல்லும் மாணவர்களுக்காக தமிழ் புதல்வன் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை கோவையில் நடைபெற்ற ஒரு விழாவில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும். இந்த நிகழ்ச்சி நேற்று நடைபெற்ற நிலையில் முதல்வர் ஸ்டாலினுடன் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் சிறிது நேரம் பேசினார். அதன் பின் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, முதல்வர் ஸ்டாலின் தமிழ்புதல்வன் திட்டத்தில் கலந்து கொண்டதற்காக எனக்கு நன்றி கூறினார்.
இது ஒரு சிறந்த திட்டமாகும். இதன் மூலம் கிடைக்கும் பணத்தை போதைப் புழக்கங்களுக்கு மாணவர்கள் பயன்படுத்தாமல் இருந்தால் நிச்சயம் இது ஒரு சிறந்த திட்டம் தான். என்னுடைய தொகுதியில் உள்ள சில உள்கட்டமைப்பு பிரச்சினைகள் மற்றும் விமான நிலையம் விரிவுபடுத்துதல் போன்றவைகள் தொடர்பாக சந்திக்க நேரம் வேண்டும் என்று முதல்வரிடம் கேட்டேன். அதற்கு அவரும் வந்து பாருங்கள் என்று கூறினார். இதைத்தொடர்ந்து வருகிற 18-ஆம் தேதி நடைபெறும் மறைந்த முதல்வர் கருணாநிதியின் உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயம் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளுமாறு என்னிடம் கேட்டுக் கொண்டார். மேலும் அதற்கு நான் கட்சியில் கேட்டு சொல்கிறேன் என்று கூறுகிறேன் என்றார்.
