
தமிழகத்தில் பேறுகால நிதி உதவியை விடுவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ள நிலையில் அதற்கு தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டத்தின் கீழ் கர்ப்பிணிகளுக்கு 14 ஆயிரம் ரூபாய் மற்றும் நான்காயிரம் ரூபாய் மதிப்புள்ள பெட்டகம் என 18 ஆயிரம் மதிப்பிலான ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.
ஆனால் இந்த உதவித்தொகை கடந்த சில வருடங்களாக யாருக்கும் கிடைப்பதில்லை என்று புகார் எழுந்த நிலையில் தற்போது நிலுவையில் உள்ள மகப்பேறு நிதி உதவியை சம்பந்தப்பட்ட பயனாளிகளுக்கு படிப்படியாக விடுவிக்க தமிழக அரசு முயற்சித்து வருகிறது. அதன்படி நிதி உதவி தாமதம் ஏற்பட்டுள்ள மொத்தம் 6.30 லட்சம் பேரில் முதல் கட்டமாக 2.63 லட்சம் பேரின் விவரங்கள் மத்திய அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்திய சுகாதாரத்துறை அனுமதி வழங்கினால் முதல் கட்ட பயனாளிகளுக்கான நிதி விரைவில் விடுவிக்கப்படும் எனவும் இதர பயனாளிகளுக்கு அடுத்தடுத்த விடுவிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவது அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.