
சென்னை மாவட்டத்தில் உள்ள விருகம்பாக்கம் கங்கை அம்மன் கோவில் தெருவில் மகாராஜா(41) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஐஸ்வர்யா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இதில் மகாராஜா விருகம்பாக்கம் ரெட்டி தெருவில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் ஒருவர் தனது வீட்டு சாவியை வீட்டில் தவறி வைத்து விட்டதாகவும், கதவை திறப்பதற்கு சிரமமாக இருக்கிறது எனக் கூறியுள்ளார்.
மேலும் மொட்டை மாடியில் இருந்து பால்கனி வழியாக வந்து வீட்டின் உள்பக்கமாக சென்று கதவை திறந்து தருமாறு அவர் மகாராஜாவிடம் உதவி கேட்டுள்ளார். இதனால் நான்காவது மாடி வழியாக மகாராஜா உள்ளே நுழைந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கால் தவறி கீழே விழுந்து படுகாயமடைந்த மகாராஜாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் மகாராஜா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.