சென்னை மாவட்டத்தில் உள்ள மதுரவாயல் அபிராமி நகர் 9-வது தெருவில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் காக்களூரில் இருந்து பால் பாக்கெட்களை மினி வேனில் ஏற்றிக்கொண்டு செங்குன்றம் பகுதியில் இருக்கும் கடைகளுக்கு சப்ளை செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம் ராஜேந்திரன் பால் பாக்கெட்டுகளை மினி வேனில் ஏற்றிகொண்டு செங்குன்றம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அவருடன் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பப்பு பணிக்கர், உஜால் பெஜாரா ஆகியோர் இருந்தனர்.

இந்நிலையில் செங்குன்றம்- திருவள்ளூர் சாலையில் மினி வேன் சென்று கொண்டிருந்தது. அப்போது முன்னால் சென்ற ட்ரெய்லர் லாரியின் பின்புறம் மினி வேன் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ராஜேந்திரன், பப்பு பணிக்கர், உஜால் ஆகிய மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.