திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள டவுன் புட்டாரத்தி அம்மன் கோவில் தெருவில் வெங்காய வியாபாரியான வெங்கடேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, கடந்த மாதம் 11-ஆம் தேதி மீசோ ஆப் என்ற தனியார் வணிக செயலின் மூலம் குழந்தைகளுக்கு தேவையான பொருட்களை ஆர்டர் செய்துள்ளார்.
கடந்த 16-ஆம் தேதி அந்த பொருட்கள் வெங்கடேசுக்கு கிடைத்தது. இந்நிலையில் சம்பந்தப்பட்ட வணிக செயலியின் பெயரில் ஒரு தபால் வந்தது. அதில் ஸ்கிராட்ச் கார்டு இருந்தது. அதனை உரசி பார்த்தபோது 10 லட்சத்து 51 ஆயிரம் ரூபாய் பரிசு தொகை கிடைத்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது. அதிலிருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசியபோது பரிசு தொகையை பெறுவதற்கு வரி, ஜிஎஸ்டி உள்ளிட்டவை சேர்த்து 1 லட்சத்து 53 ஆயிரத்து 600 ரூபாய் பணம் செலுத்த வேண்டும் மறுமுனையில் பேசிய நபர் கூறியுள்ளார்.
இதனை நம்பி பணத்தை வெங்கடேஷ் சம்பந்தப்பட்ட வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்துள்ளார். ஆனால் பரிசுத்தொகை வழங்காமல் மேலும் 50 ஆயிரம் ரூபாய் கேட்டு தொந்தரவு அளித்துள்ளனர். எனவே மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் குறிப்பிட்டுள்ளார். அந்த புகாரின் பேரில் நூதன முறையில் வியாபாரிடம் மோசடி செய்தவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.