திருச்சி மாவட்டத்தில் உள்ள குமிளூரில் வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம் அமைந்துள்ளது. இங்கு தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த கல்லூரியில் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற இருப்பதால் கல்லூரியில் இருக்கும் கைப்பந்து மைதானத்தை தற்காலிக ஊழியர்களும், டிப்ளமோ மாணவர்களும் சீர்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் வலை அமைப்பதற்காக இரும்பு கம்பத்தை நட்டு கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக மேலே சென்ற மின் கம்பியின் மீது இரும்பு கம்பம் உரசியது.

இதனால் தற்காலிக ஊழியர்களான மதன்குமார், செந்தமிழ் வேந்தன், திவாகர், மாணவர்களான முகமது யூசுப்கான், லோகேஷ், மகேந்திரன், புகழேந்தி, பரசுராமன் ஆகியோர் மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்தனர். அவர்களை உடனடியாக மீட்டு லால்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அதிக பாதிப்படைந்த மதன்குமார் திருச்சியில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் மாணவர்களை பணியில் ஈடுபடுத்தியது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.