சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை அருகே இருக்கும் கண்ணங்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த கனகம் என்பவருக்கு மூன்று மகள்களும் ஒரு மகனும் இருக்கின்றனர். அவரின் மகன் பாலசுப்ரமணியம் வெளிநாட்டில் வேலை செய்து வருகின்றார். கனகத்தின் மூத்த மகள் சாந்தி தாணிச்சாவூரணி கிராமத்தில் இருக்கின்றார். இவரின் மகளுக்கு திருமணம் பேசி முடிக்கப்பட்ட நிலையில் சென்ற பத்தாம் தேதி நகை கடைக்கு சென்று 49 பவுன் நகைகள், வெள்ளி பொருட்கள், பட்டுப்புடவைகள் என அனைத்தையும் கனகம் வாங்கி வீட்டில் வைத்துள்ளார்.

சம்பவத்தன்று கனகத்தின் வீட்டில் கனகம் அவரின் மகள் வேலுமதி பேரன் மூவரசு உள்ளிட்டோர் ஹாலில் உறங்கியுள்ளனர். அதிகாலை வீட்டிற்குள் புகுந்த மர்ம கும்பல் வேலுமதி தலையில் இரும்பு கம்பியால் தாக்கியும் அறிவாளால் வெட்டியும் அவரை படுகொலை செய்துள்ளார்கள். மேலும் கனகம் மற்றும் மூவரசை அறிவாளால் வெட்டியுள்ளார்கள். இதன்பின் வீட்டில் இருந்த பீரோவை உடைத்து நகை, வெள்ளி பொருட்கள் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்துக் கொண்டு அங்கிருந்து தப்பித்துச் சென்று விட்டனர்.

இதில் படுகாயம் அடைந்த கனகத்தை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சிறுவன் மூவரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து 10 தனி படைகள் அமைத்து கொள்ளை கும்பலை தேடி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட கனகம் மற்றும் அவரின் மகள் வேலுமதி உடல்களை வாங்க மறுத்து சென்ற மூன்று நாட்களாக உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நான்காவது நாளாக போராட்டம் நீடித்ததையடுத்து போலீஸ் சூப்பிரண்டு மற்றும் அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதன்பின் இரண்டு உடல்களையும் பெற்றுக் கொள்வதும் என்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு 25 லட்சம் நிவாரணமாக வழங்க வேண்டும் என்றும் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இதன்பின் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான முன்னாள் எம்.எல்.ஏ கே.ஆர்.ராமசாமி, கனகமும் அவரின் மகளும் கொலை செய்யப்பட்டுள்ளனர். கனகத்தின் பேத்தியின் திருமணத்திற்காக வாங்கிய நகைகளை கொலையாளிகள் கொள்ளையடித்து விட்டனர். ஆனால் அந்த பெண்ணுக்கு நிச்சயம் செய்தபடி திருமணம் நடக்க வேண்டும் .

ஆகையால் இயன்றதை செய்யுங்கள். மற்றவற்றை நான் பார்த்துக் கொள்கிறேன் என தெரிவித்தார். இதை அடுத்து கூட்டத்தில் இருந்த பலரும் உதவ முன் வந்தனர். கிராம வாரியாகவும் உதவிகள் வழங்கப்பட்டது. அப்போதே 55 பவுன் நகை சேர்த்ததாக கூறப்பட்டது. இந்த உதவிகள் அனைத்தும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. மேலும் போராட்ட இடத்திற்கு வந்த அமைச்சர் கேஆர்.பெரிய கருப்பன் மற்றும் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.