வள்ளலார் வழி நின்று தமிழ்நாட்டை பசி இல்லா மாநிலமாக மாற்ற வேண்டும் என ஆட்சியர் பேசியிருக்கின்றார்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மாநகராட்சி திருமண மண்டபத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பாக வள்ளலார் 200 முப்பெரும் விழா நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமை தாங்க சிறப்பு விருந்தினராக மாநகராட்சி மேயர் பங்கேற்றார். இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் பேசியதாவது, வள்ளலார் 200 முப்பெரும் விழா கொண்டாடப்பட்டு வருகின்றது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடந்து வரும் பணிகள் நிறைவு பெற்ற பிறகு திருப்பதிக்கு இணையாக திருச்செந்தூர் கோவிலை தமிழ்நாடு திரும்பி பார்க்கும் வகையில் இருக்கும். வள்ளலார் வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என தெரிவித்தார். வடலூரில் அவர் ஏற்றிய அணையா விளக்கு சுனாமி மற்றும் கொரோனா காலத்தில் கூட அணையவில்லை.
வள்ளலார் காட்டிய பசியோடு இருக்கும் ஒருவருக்கு பசியாற்ற வேண்டும் என்ற வழியில் அனைவருக்கும் செல்ல வேண்டும். உடலை வருத்தி விரதம் இருப்பதை விட பசியால் இருப்பவர்களுக்கு உணவு வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை பணியாற்றி வருகின்றது. வள்ளலார் வழி நின்று நாம் பசியில்லா மாநிலமாக நமது மாநிலத்தை மாற்ற வேண்டும் என உரையாற்றினார்.