குற்ற செயல்களில் ஈடுபடும் சிறுவர்களை நல்வழிப்படுத்தும் பொறுப்பு பெற்றோருக்கு இருப்பதாக போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கால்டுவெல் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட காவல்துறை சார்பாக பள்ளிக்கு திரும்புவோம் என்ற பெற்றோர்-மாணவர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமை தாங்கி உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது, தூத்துக்குடி 16 மற்றும் 17 வயதுடைய சிறுவர்கள் பல குற்ற செயல்களில் ஈடுபட்டு தங்களின் எதிர்காலத்தை தொலைத்து வருகின்றார்கள். பள்ளியில் படிக்கும் மாணவர்களின் கல்வி முழுமை பெறுவதற்கு நாம் உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம். 16 17 வயது முழுமையான பக்குவம் அடைந்த வயது கிடையாது. இந்த வயதில் இருக்கும் சிறுவர்களை நாம் குற்றச் செயல்களில் ஈடுபடுவதை தடுத்து நல்வழிப்படுத்தும் பொறுப்பு நம் சமுதாயத்திற்கு இருக்கின்றது.

காவல்துறை மூலமாக பள்ளிக் கல்வியை பாதையில் நிறுத்திய 205 மாணவர்கள் கணக்கெடுக்கப்பட்டிருக்கின்றார்கள். அதில் கல்வியின் இடை நிறுத்திய 60 மாணவர்களின் பெற்றோர்கள் வரவழைக்கப்பட்டு அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியிருக்கின்றோம். தூத்துக்குடியில் இதுவரை 2405 இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு 21,000 பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பள்ளிக்கு திரும்புவோம் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியை காவல்துறையால் ஆரம்பிக்கப்பட்டு பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திய குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும் மீண்டும் சிறுவர்களை பள்ளிக்கு அனுப்புவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.