
14 ஆட்டோக்களில் தஞ்சைக்கு 37 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்தார்கள்.
சென்னையில் இருந்து வருடம் தோறும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஆட்டோக்கள் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சுற்றுலா மேற்கொள்வார்கள். ஆனால் சென்ற மூன்று வருடங்களாக கொரோனா தாக்கத்தின் காரணமாக சுற்றுலா பயணம் மேற்கொள்ளவில்லை. இந்த நிலையில் தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் வர ஆரம்பித்துள்ளனர். இந்த நிலையில் சென்னையிலிருந்து வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் திருவனந்தபுரம் வரை ஆட்டோக்களில் சுற்றுலா பயணம் மேற்கொண்டு உள்ளார்கள்.
இவர்கள் சென்ற 22ஆம் தேதி சென்னையில் இருந்து பயணத்தை தொடங்கி புதுச்சேரி வழியாக தஞ்சை வந்தடைந்தார்கள். இதில் 37 சுற்றுலா பயணிகள் 14 ஆட்டோக்களில் வந்தடைந்தார்கள். இவர்கள் ஆட்டோக்களில் தஞ்சை பெரிய கோவிலுக்கு சென்று கோவிலை சுற்றி பார்த்ததோடு புகைப்படமும் எடுத்து மகிழ்ந்தார்கள். இதன் பின் தஞ்சையில் இருந்து புறப்பட்ட சுற்றுலா பயணிகள் கந்தர்வகோட்டை, புதுக்கோட்டை, மேலூர் வழியாக மதுரை சென்றடைந்து அதன் பின்னர் அங்கிருந்து பல மாவட்டங்கள் வழியாக வரும் 6-ம் தேதி கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரத்தில் தங்களின் பயணத்தை நிறைவு செய்ய உள்ளார்கள்.