ஹைதராபாத் நகரின் அல்வால் பகுதியில், பள்ளி மாணவிகளான மூன்று மைனர் சிறுமிகள், மூன்று இளைஞர்களால் கடத்தி அழைத்துச் செல்லப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் 9-ம் வகுப்பு படித்து வரும் சிறுமிகள். இவர்கள் சம்பவத்திற்குப் பிறகு, தங்கள் பெற்றோரிடம் துயரமான உண்மையை பகிர்ந்ததைத் தொடர்ந்து, இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
செப்டம்பர் 20-ஆம் தேதி, தசரா விழாவை பள்ளியில் கொண்டாடப்போகிறோம் என்று கூறி வீட்டை விட்டு வெளியேறிய சிறுமிகள், அதன்பின் காணாமல் போனதாக குடும்பத்தினர் தெரிவித்தனர். இது பற்றி போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அவர்கள் வழக்குப்பதிவு செய்து, மது (19 வயது) – GHMC ஒப்பந்த ஊழியர், வம்சி அரவிந்த் (22) நீரஜ் (21), சோமேஷ் – குற்றம் நடைபெற்ற லாட்ஜின் மேலாளர் ஆகியோரை கைது செய்துள்ளனர்.
மதுவும் அவரது நண்பர்களும், சிறுமிகளை அழைத்துச் செல்வதாக நமபிக்கியாக பேசினர். முதலில், ஹைதராபாத்திலுள்ள ஓர் ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று மதிய உணவளித்தனர். பின்னர், சிறுமிகளை ஹைதராபாத்திலிருந்து சுமார் 64 கிலோமீட்டர் தொலைவில் உள்ள யாதகிரிகுட்டா நகரத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு, ஒரு உள்ளூர் லாட்ஜில் மூன்று தனித்தனி அறைகள் முன்பதிவு செய்யப்பட்டன. அந்த அறைகளில், குற்றவாளிகள் சிறுமிகளை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாகக் கூறப்படுகிறது. மறுநாள், சிறுமிகள் ஹைதராபாத்தின் தர்னாகா பகுதியில் இறக்கிவிடப்பட்டனர்.
தொடக்கத்தில் பயந்த சிறுமிகள், நிகழ்ந்தவற்றை யாரிடமும் பகிரவில்லை. பின்னர், தங்கள் பெற்றோரிடம் உண்மையை தெரிவிக்க, அவர்கள் உடனடியாக அல்வால் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சிறுமிகள் காப்பகத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு, மருத்துவ பரிசோதனையில் பாலியல் வன்கொடுமை உறுதி செய்யப்பட்டது. பின்னர், மூன்று இளைஞர்களும், லாட்ஜ் மேலாளருமான சோமேஷும் போலீசாரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். மேலும் தற்போது நால்வரும் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
