காதல் தொடர்பான மனஉளைச்சலில் அரவக்குறிச்சியில் நடைபெற்ற துயரச்சம்பவம் உள்ளூர் மக்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. அதாவது கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியருகே உள்ள வேலம்பாடி கிராமத்தைச் சேர்ந்த வசந்தகுமார் (26), எலக்ட்ரீசியனாக பணியாற்றி வந்தவர். அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்–2 படிக்கும் 16 வயது சிறுமியை கடந்த மூன்று ஆண்டுகளாக அவர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் சிறுமியின் பெற்றோருக்கு தெரிய வர, அவர்கள் கடுமையாக கண்டித்திருந்தனர்.
இந்நிலையில், நேற்று காலை 10 மணியளவில் சிறுமியின் பெற்றோர் வேலைக்குச் சென்றதை பயன்படுத்தி, வசந்தகுமார் சிறுமியின் வீட்டிற்கு சென்றார். இருவரும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருக்கும் போது, காதலுக்கு பெற்றோர் காட்டும் எதிர்ப்பு காரணமாக உயிரை மாய்த்துக்கொள்ள முடிவு செய்ததாக கூறப்படுகிறது.
அதன்படி, வசந்தகுமார் பிளேடால் சிறுமியின் கழுத்தை அறுத்துள்ளார். ரத்தம் பெருமளவில் சிந்தியதால் சிறுமி மயங்கி விழுந்துள்ளார். அவர் உயிரிழந்துவிட்டார் என தவறாக நினைத்த வசந்தகுமார், அதே வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சில நேரம் கழித்து மயக்கம் தெளிந்த சிறுமி, வசந்தகுமார் தூக்கில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே வெளியே வந்து அக்கம்பக்கத்தினரிடம் தகவல் தெரிவித்தார். அப்பகுதி மக்கள் சிறுமியை உடனடியாக மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து அரவக்குறிச்சிச் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
