திருச்சியை அடுத்த கூத்தைப்பார் பேரூராட்சி திமுக கவுன்சிலர் ரஞ்சித் குமார், மர்ம கும்பலால் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆளும் கட்சியைச் சேர்ந்த ஒரு மக்கள் பிரதிநிதிக்கே பாதுகாப்பு இல்லாத அளவுக்கு தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக அவர் விமர்சித்துள்ளார்.
திருச்சியில் தொடர்ந்து நடைபெற்று வரும் இதுபோன்ற படுகொலைச் சம்பவங்கள் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.திமுக ஆட்சியில் கடந்த ஐந்து ஆண்டுகளில் சுமார் 8,750-க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்துள்ளதாகவும், நாளொன்றுக்கு சராசரியாக 5 கொலைகள் வரை அரங்கேறுவதாகவும் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
மக்களின் உயிரைப் பாதுகாக்கத் தவறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதற்குப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் சாடியுள்ளார். சட்டம்-ஒழுங்கை பராமரிக்கத் தவறிய இந்த அரசை, இன்னும் சில வாரங்களில் நடைபெறவுள்ள தேர்தலில் மக்களே விரட்டியடிப்பார்கள் என்றும் அவர் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.
