அதிமுகவில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியும், முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி தலைமையில் மற்றொரு அணியும் செயல்பட்டு வருவதாகக் கூறப்படும் நிலையில், இன்று சென்னையில் நடைபெற்ற அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு மொத்தம் உள்ள 82 மாவட்டச் செயலாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், பாதிக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கூட்டத்தைப் புறக்கணித்துள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தக் கூட்டத்தில் திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி.உதயகுமார், பொள்ளாச்சி ஜெயராமன், ராஜேந்திரபாலாஜி, பி.வி.ரமணா, அக்ரி கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட 26 மாவட்டச் செயலாளர்கள் மட்டுமே நேரடியாகப் பங்கேற்றுள்ளனர். இவர்களுடன் அண்மையில் புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்டச் செயலாளர்களில் சிலரும் கலந்து கொண்டனர். எனினும், மூத்த மற்றும் முன்னணி நிர்வாகிகள் பலர் இக்கூட்டத்திற்கு வராததால், கூட்டத்தில் பங்கேற்காத மற்ற மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளின் விபரங்கள் குறித்து தலைமைத் தரப்பில் அதிகாரப்பூர்வமாக எவ்வித விளக்கமும் அளிக்கப்படவில்லை.

அதிமுகவில் கோஷ்டி பூசல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் இந்தச் சூழலில், கடந்த சில தினங்களுக்கு முன்பு முன்னாள் அமைச்சர் செம்மலை கட்சியை விட்டு விலகினார். அதன் தொடர்ச்சியாக, இன்று எடப்பாடி பழனிசாமி கூட்டிய முக்கியத்துவம் வாய்ந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை, கட்சியின் முன்னணித் தலைவர்களில் ஒருவரான டி.ஜெயக்குமாரும் புறக்கணித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளதுடன், இபிஎஸ் தலைமைக்கு புதிய சவாலையும் ஏற்படுத்தியுள்ளது.