உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள மெயின்பூர் பகுதியில் 11ஆம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவி வசித்து வருகிறார். இந்த மாணவி கடந்த வருடம் மே மாதம் பயிற்சி மையத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் நீரஜ் என்பவரால் காரில் கடத்தி செல்லப்பட்டார். இதில் நீரஜ் மாணவி பயிற்சி மையத்திற்கு செல்லும் வழியில் அறிமுகமானவர். இந்நிலையில் தொடர்ந்து 8 மாதங்களாக சிறுமியை தொடர்ந்து பல ஊர்களுக்கு கடத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இறுதியாக ராஜஸ்தான் மாநிலத்தில் அஜ்மீர் பகுதிக்கு சிறுமியை கொண்டு சென்றனர். இந்த ஊருக்கு செல்வதற்கு முன்பு வரை சிறுமியை தொடர்ந்து பலருக்கு விற்று பாலியல் வன்கொடுமை செய்ய வைத்துள்ளனர். இறுதியாக ராஜஸ்தானில் அந்த சிறுமியை ஆஷா என்பவரிடம் ஒப்படைக்க அவர் விஷ்ணு மாலி என்பவரிடம் 3 1/2 லட்சத்திற்கு சிறுமியை விற்பனை செய்து விட்டார்.
அதோடு அந்த சிறுமியிடம் விஷ்ணு மாலியை திருமணம் செய்து கொள்ளுமாறும் ஆஷா வற்புறுத்தியுள்ளார். இதைத் தொடர்ந்து அந்த சிறுமி திருமணத்திற்கு ஒப்புக்கொண்ட நிலையில் விஷ்ணு அந்த சிறுமியுடன் எடுத்துக்கொண்ட போட்டோக்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டார். இந்த போட்டோவை மெயின்புரி பகுதியை சேர்ந்த ஒருவர் பார்த்துவிட்டார். அவர் இது தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் கொடுத்த நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று சிறுமியை மீட்டனர். பின்னர் சிறுமி கொடுத்த தகவலின் படி முதலில் நீரஜை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
