பாலிவுட் திரையுலகின் ‘கிங் கான்’ என்று அழைக்கப்படும் ஷாருக்கானிடம் சுமார் 10 ஆண்டுகள் பாதுகாவலராகப் பணியாற்றிய யாசீன் கான், தனது பணி அனுபவம் மற்றும் திரைத்துறையில் நிலவும் சம்பள முறைகள் குறித்து பல்வேறு சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
ஷாருக்கானிடம் 2001 முதல் 2011 வரை தலைமைப் பாதுகாப்பு அதிகாரியாகப் பணியாற்றிய யாசீன் கான், சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறுகையில், “ஷாருக் சாருடன் இணைந்த பிறகு என் வாழ்க்கையே மாறிப்போனது. அவருடன் பணிபுரிந்தபோது ஒரு சொகுசு வாழ்க்கையை அனுபவித்தேன். அவருடன் தனியார் விமானங்களில் உலகம் முழுவதும் பயணம் செய்தேன், ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் தங்கினேன். அவரிடம் சேருவதற்கு முன்பு வரை நான் விமானத்தையே பார்த்ததில்லை. ஆனால், அவருடன் இருந்தபோது எனது 8 பாஸ்போர்ட்டுகளும் வெளிநாட்டுப் பயண முத்திரைகளால் நிறைந்திருந்தன,” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
பிரபலங்களின் பாதுகாவலர்களுக்கு ஆண்டுக்கு ரூ. 2 கோடி முதல் ரூ. 2.5 கோடி வரை சம்பளம் வழங்கப்படுவதாக வெளியாகும் செய்திகள் குறித்துக் கேட்டபோது, அதை யாசீன் மறுத்தார். “பாதுகாவலர்களுக்கு கோடி கணக்கில் சம்பளம் வழங்கப்படுவதாகக் கூறப்படுவது முற்றிலும் பொய். பரஸ்பர புரிதலின் அடிப்படையில் சம்பளம் மாறுபடுமே தவிர, அது ஒருபோதும் கோடி ரூபாயைத் தொடுவதில்லை,” எனத் தெளிவுபடுத்தினார்.
திரைப்படப் படப்பிடிப்புகளின் போது ஓட்டுநர்கள், ஒப்பனைக் கலைஞர்கள் போன்றோருக்குத் தயாரிப்பாளர்கள் தனியாகப் பணம் வழங்குவார்கள். ஆனால், பாதுகாவலர்களுக்கு அந்த நடைமுறை முன்பு இல்லை என்பதைச் சுட்டிக்காட்டிய யாசீன், இது குறித்து ஷாருக்கானின் மனைவி கௌரி கானிடம் பேசியுள்ளார். யாசீனின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட கௌரி கான், தயாரிப்பாளர்களிடம் பேசி பாதுகாவலர்களுக்கும் படப்பிடிப்பின் போது தனியாக ஊதியம் மற்றும் ஒப்பந்தம் வழங்கும் முறையைக் கொண்டு வந்துள்ளார்.
மேலும் தனிப்பட்ட காரணங்களுக்காக 2011-ல் ஷாருக்கானிடம் இருந்து விலகிய யாசீன் கானுக்கு, ஷாருக்கான் முழு ஆதரவு அளித்துள்ளார். தற்போது ‘YK PROSEC’ என்ற சொந்த பாதுகாப்பு நிறுவனத்தைத் தொடங்கி நடத்தி வரும் யாசீன், விராட் கோலி-அனுஷ்கா சர்மா, பிரியங்கா சோப்ரா-நிக் ஜோனஸ் போன்ற முன்னணி நட்சத்திரங்களின் திருமணங்களுக்குப் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டு வெற்றிகரமான தொழிலதிபராக உயர்ந்துள்ளார்.
