ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு மாதிரி பள்ளியில் எஸ்.பி மேகன் என்ற மாணவர் 7-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுவன் பள்ளிக்கூட மாணவ, மாணவிகளிடமிருந்து வீட்டில் இருக்கும் பலாப்பழம், சப்போட்டா பழம், நாவல் பழம், சீதாப்பழம் உள்ளிட்ட பழங்களின் விதைகளை வாங்கியுள்ளார். அதன் மூலம் உருவாக்கப்பட்ட விதை பந்துகளை காலியான இடத்தில் வீசினால் நீரின் மூலம் செடி வளர்கிறது. கடந்த 3 ஆண்டுகளாக பெற்றோரின் உதவியுடன் எஸ்.பி மேகன் 2 லட்சம் விதைப்பந்துகளை உருவாக்கி ஈரோடு மாவட்டத்தில் இருக்கும் தன்னார்வலர்களுக்கு கொடுத்துள்ளார்.

மேலும் வனப்பந்து என்ற தலைப்பிலான புத்தகத்தையும் எஸ்.பி மேகன் எழுதியுள்ளார். இந்நிலையில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா எஸ்.பி மேகனை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். இது போன்ற விழிப்புணர்வை மற்ற மாணவ, மாணவிகளிடம் ஏற்படுத்த வேண்டும் எனவும், மாணவர்களின் முழு ஈடுபாட்டுடன் நர்சரி பூங்காக்களை வளர்க்க வேண்டும் எனவும் கலெக்டர் கல்வித்துறை அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். இந்த நிகழ்ச்சியின் போது கூடுதல் கலெக்டர் நாரணவ்ரே மனிஷ் மற்றும் மாணவரின் தந்தை ஆகியோர் உடன் இருந்தனர்.