மதுரை மாவட்டத்திலுள்ள சேந்தமங்கலம் கிழக்கு தெருவில் செந்தில்(37) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஐந்தாவது வார்டு உறுப்பினராக இருக்கிறார். இந்நிலையில் செந்தில் தனது மனைவியின் பெயரில் வாங்கிய 50 சென்ட் நிலத்திற்கும், பாகப்பிரிவினை பங்கில் கிடைத்த 20 சென்ட் நிலத்திற்கும் பட்டா உட்பிரிவு செய்வதற்கு மனு கொடுத்திருந்தார். அந்த நிலத்தை அளவீடு செய்தால் தான் பட்டா வழங்கப்படும் என தெரியவந்ததால் செந்தில் பாலமேடு பிர்கா சர்வேயர் சந்திரா என்பவரை அணுகியுள்ளார்.

அப்போது சந்திரா 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. இதுகுறித்து செந்தில் மதுரை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுரைப்படி ரசாயனம் தடவிய பத்தாயிரம் ரூபாய் பணத்தை செந்தில்குமார் சந்திராவிடம் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் சந்திராவை கையும், களவுமாக கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.