தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பச்சு பள்ளி என்ற பகுதி உள்ளது. இங்கு ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் நிலையில் உள்ளூர் மற்றும் வட மாநில தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். இந்த அடுக்குமாடி குடியிருப்பை சுற்றி கடந்த 2 நாட்களுக்கு முன்பாக பெரிய சுவர் கட்டப்பட்டுள்ளது. சுமார் 40 அடி உயரத்திற்கு தடுப்புச் சுவர் கட்டப்பட்டுள்ளது. இதன் அருகே வடமாநில தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்துடன் குடிசையமைத்து தங்கி இருந்தனர்.

இந்நிலையில் நேற்று இரவு 8.30 மணி அளவில் அங்கு பலத்த மழை பெய்துள்ளது. அப்போது புதிதாக கட்டப்பட்ட தடுப்பு சுவரில் தண்ணீர் வெளியே செல்வதற்கு வழி இல்லாததால் தண்ணீர் முழுவதும் தடுப்பு சுவரின் அருகே தேங்கியது. இதனால் தடுப்பு சுவர் திடீரென இடிந்து அங்கிருந்த குடிசை மீது விழுந்தது. இதில் 4 வயது குழந்தை உட்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அதோடு சிலர் படுகாயம் அடைந்தனர். மேலும் இது குறித்த தகவலின் பேரில் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.