இன்றைய காலகட்டத்தில் தங்களுக்கு நடக்கும் சம்பவங்கள் குறித்து பல பயனர்கள் சோசியல் மீடியாவில் பகிர்ந்து கொள்கின்றனர். அந்த வகையில் தற்போது ரெடிட்டில் தற்போது வைரலாக பரவி வரும் ஒரு பதிவில், தனது ஜியோ சிம் கார்டை மீண்டும் செயல்படுத்த ஒருவர்  ஜெர்மனியில் இருந்து இந்தியாவுக்கு பயணித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரெடிட் பதிவில் ஒருவர்,  “அனைவருக்கும் வணக்கம், வெளிநாட்டில் வசிக்கும் போது எனது ஜியோ ப்ரீபெய்ட் எண்ணுடன் நான் எதிர்கொண்ட ஒரு சூழ்நிலை குறித்து தெளிவு பெற விரும்புகிறேன். எனது சிம் ஆறு மாதங்களுக்கும் மேலாக செயலில் இல்லை என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன்.

மேலும் அவர்களுக்கு செயலிழக்கச் செய்ய அனைத்து உரிமைகளும் உள்ளன. ஆனால் எந்த அதிகாரப்பூர்வ SMS அல்லது மின்னஞ்சல் மூலமாகவும் எனக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்படவில்லை.

TRAI விதிமுறைகள் மற்றும் ஜியோவின் சொந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை மேற்கோள் காட்டி, சிம் கார்டை செயலிழப்பதற்கு முன் முன்கூட்டியே அறிவிப்பைப் பெற வேண்டும் என்றும், குறைந்தபட்சம் ரூ.20 ரீசார்ஜ் செய்தால் மீண்டும் செயல்படுத்த 15 நாள் சலுகை கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

மேலும் “எனது சிம் ஜூன் 11 வரை செயலில் இருந்தது (எஸ்எம்எஸ் ஆதாரம் உள்ளது). ஆனால் எந்த சலுகை காலமும் இல்லாமல் மறுநாள் துண்டிக்கப்பட்டது. வரவிருக்கும் செயலிழப்பு குறித்து எனக்கு எந்த அறிவிப்பும் கிடைக்கவில்லை,” என்று அவர் குற்றம் சாட்டினார்.

“இறுதியில், எனது எண்ணை மீண்டும் செயல்படுத்துவதற்காக நான் ஜெர்மனியில் இருந்து இந்தியாவுக்கு விமானத்தில் திரும்ப வேண்டியிருந்தது, இதனால் எனக்கு சம்பளம் மற்றும் பயணச் செலவுகள் இழப்பு ஏற்பட்டது,” என்று அவர் கூறினார்.