ஐரோப்பிய நாட்டான ஸ்லோவாக்கியாவின் வ்ராப்லே பகுதியில் நடைபெற்ற தொல்பொருள் அகழாய்வில், சுமார் 7,000 ஆண்டுகள் பழமையான அதிர்ச்சிகரமான கண்டுபிடிப்பு வெளியாகியுள்ளது. அங்கு ஒரே இடத்தில் குறைந்தது 78 மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இதில் 77 உடல்களின் தலைகள் முற்றிலும் காணாமல் போயிருந்தன. ஒரே ஒரு குழந்தையின் எலும்புக்கூடு மட்டுமே தலையுடன் கிடைத்தது. ஆரம்பத்தில் இது கொடூரமான படுகொலை அல்லது போர் சம்பவத்தின் சான்றாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதினர்.
ஆனால் பின்னர் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள், இந்த உடல்களின் தலைகள் மரணத்திற்குப் பிறகு மிகவும் கவனமாகவும் திட்டமிட்ட முறையிலும் அகற்றப்பட்டிருக்கலாம் என்பதைக் காட்டியுள்ளன. ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, இந்த எலும்புக்கூடுகளில் வன்முறையால் தலை துண்டிக்கப்பட்டதற்கான தெளிவான ஆதாரங்கள் இல்லை.
மாறாக, அக்கால மக்களின் மத நம்பிக்கைகள், சடங்குகள் அல்லது முன்னோர்கள் வழிபாட்டுடன் தொடர்புடைய ஒரு விசித்திரமான இறப்பு சடங்காக இது இருக்கலாம் என கருதப்படுகிறது. தலைகள் எங்கு கொண்டு செல்லப்பட்டன என்பது இன்னும் மர்மமாகவே உள்ளது. மனித வரலாற்றின் ஆரம்பகால விவசாய சமூகங்களின் வாழ்க்கை, மரணம் மற்றும் ஆன்மீக நம்பிக்கைகள் குறித்து புதிய தகவல்களை இந்த கண்டுபிடிப்பு வெளிச்சமிட்டு வருகிறது.
