கர்நாடகாவின் குல்பர்கா மாவட்டத்தைச் சேர்ந்த இரு வயதான பக்தர்கள், உத்தரகாண்ட் மாநிலத்தின் புனித கேதார்நாத் கோயிலில் சிவபெருமானை தரிசிக்க நடைபயணமாக 2,000 கிலோமீட்டருக்கு மேலாக நடந்துசென்று ஆன்மிக அன்பை நிரூபித்துள்ளனர்.

இந்த இருவரும் மார்ச் 3ஆம் தேதி தங்கள் பாதயாத்திரையைத் தொடங்கி, ஆரம்பத்தில் திட்டமிட்டிருந்த 75 நாட்களுக்கு முன்னதாகவே, அதாவது 60 நாட்களில், மே 1ஆம் தேதி கோயிலின் வாசலை அடைந்துள்ளனர். அவர்களின் பயண வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவி, மக்கள் மனங்களை நெகிழ வைத்துள்ளது.

 

இந்த வீடியோவில், மழைக்கோட்டு மற்றும் தலைப்பாகை அணிந்த 70 வயதான இருவர், கேதார்நாத் கோயிலின் வாசலில் நின்று பக்தியுடன் பேசும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. அதில் ஒருவர் கூறுகிறார்: “நாங்கள் கர்நாடகாவிலிருந்து கால்நடையாக வந்தோம், இது எங்கள் 60வது நாள்.

நாங்கள் நினைத்ததைவிட விரைவில் வந்துவிட்டோம். இது எங்களுக்கு மகிழ்ச்சி தருகிறது” என தெரிவித்தார். வீடியோ பதிவிட்டுள்ள இன்ஸ்டாகிராமர் ஷிவா ராஜஸ்தானி, இந்தக் கிளிப் மூலம் அவர்களின் தன்னம்பிக்கை மற்றும் பக்தியை உலகிற்கு எடுத்துச் சென்றுள்ளார்.

இந்த வீடியோக்கு ஏராளமான நெட்டிசன்கள் “ஹர் ஹர் மகாதேவ்!” என ஆனந்த கோஷமிட்டு பகிர்ந்துள்ளனர். சிலர், “இது உண்மையான பக்தி, எந்த விளம்பரத்தையும் தேடாமல் ஆன்மிகத்துக்காக நடந்த பயணம்” எனக் கூறினார்.

இந்த வீடியோ, மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட லைக்குகளைப் பெற்றுள்ளது. இந்த சம்பவம், தற்போதைய தலைமுறைக்கு ஒரு பக்தியும், உறுதியும் நிறைந்த எடுத்துக்காட்டாக இருப்பது குறிப்பிடத்தக்கது.