தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள குறும்பலாப்பேரி அம்மன் நகரைச் சேர்ந்த சக்திவேல் (32) என்பவர், ஆலங்குளம் பகுதியில் வசிக்கும் உறவினரின் வீட்டுக்கு அடிக்கடி வருவதாக கூறப்படுகிறது.
அவ்வாறு வருகை தந்தபோது, அதே ஊரைச் சேர்ந்த திருமணமாகி 7 ஆண்டுகளாக குழந்தை இல்லாத காரணத்தால் கணவரை பிரிந்து தாத்தா வீட்டில் வசித்து வந்த ஒரு இளம்பெண்ணுடன் சக்திவேல் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் வழியாக நட்பு ஏற்படுத்திக் கொண்டார். பின்னர் அந்த நட்பு நெருக்கமாகி, இருவரும் தனிமையில் சந்தித்து பழகியதாக கூறப்படுகிறது.
அந்த சந்திப்பின் போது, சக்திவேல் அந்த இளம்பெண்ணுடன் இருந்த ஆபாச காட்சிகளை தனது செல்போனில் பதிவு செய்து வைத்திருந்தார். பின்னர் அந்த வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிடுவேன் என மிரட்டி, அந்த இளம்பெண்ணிடம் ரூ.3 லட்சம் பணம் பறித்ததாக கூறப்படுகிறது. பின்னர் மேலும் ரூ.1 லட்சம் கோரியபோதும், இளம்பெண் மறுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த சக்திவேல், அந்த ஆபாச வீடியோவை அப்பகுதியைச் சேர்ந்த தனது உறவினர்கள் சிலருக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது. அதைப் பார்த்த அந்த உறவினர்களும் இளம்பெண்ணை மிரட்டியுள்ளனர்.
இச்சம்பவத்தால் மனமுடைந்த அந்த இளம்பெண், தாயிடம் விவரங்களை கூறிய பின்னர் ஆலங்குளம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து நேற்று காலை, இளம்பெண் தனது தாத்தா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் கதறி அழுதனர்.
தகவல் அறிந்த ஆலங்குளம் போலீசார் விரைந்து சென்று, உடலை கைப்பற்றி தென்காசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தற்கொலைக்குப் முன்பு, இளம்பெண் தனது மரணத்துக்கு காரணமான சிலரின் பெயர்களை குறிப்பிட்டு ஒரு கடிதம் எழுதி வைத்திருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
அந்த கடிதத்தின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி, இளம்பெண்ணை தற்கொலைக்குத் தூண்டியதாக குறும்பலாப்பேரி சக்திவேல், மருதம்புத்தூரைச் சேர்ந்த முத்துராஜா (36) மற்றும் முருகேசன் (42) ஆகிய மூவரையும் கைது செய்தனர். மேலும் இதில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் சிலரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
