கர்நாடக மாநிலம் யாத்கிரி மாவட்டத்தில் உள்ள ஷாஹாப்பூரில், ஆசிரமம் நடத்தி வரும் மல்லிகார்ஜுன முத்யா என்ற சாமியார், 7 வயது சிறுமி ஒருவரிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், சிறுமியைத் தனது மடியில் அமர வைத்து முத்தமிடுவது போன்ற அருவருப்பான காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதிர்ச்சிகரமான விஷயம் என்னவென்றால், சிறுமியின் பெற்றோரும் அங்கேயே அமர்ந்து இதனை வீடியோ எடுத்துள்ளனர்.
இந்த வீடியோவைத் தானாக முன்வந்து (Suo Motu) கவனித்த கர்நாடக மாநிலக் குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம், உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. சிறுமியின் பெற்றோரை அழைத்து விசாரித்தபோது, அவர்கள் “இதில் எங்களுக்குத் தவறாக ஒன்றும் தெரியவில்லை” என்று கூறியுள்ளனர். இருப்பினும், வீடியோவில் அந்தச் சிறுமி மிகவும் அசெளகரியமாக இருப்பதை உறுதி செய்த அதிகாரிகள், மல்லிகார்ஜுன முத்யா மீது போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தற்போது அந்த போலிச் சாமியாரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
