உத்தரப் பிரதேச மாநிலம், பாக்பத் மாவட்டத்தில் உள்ள துண்டஹேரா கிராமம், தற்போது உலகெங்கிலும் உள்ள பக்தர்களின் கவனத்தை ஈர்க்கும் ஆன்மீக மையமாக மாறியுள்ளது. இங்குள்ள ஸ்ரீ பாலாஜி தாம் ஆசிரமத்தின் நிறுவனர், மகாமண்டலேஷ்வர் பையா தாஸ் ஜி மகாராஜ் மேற்கொண்டு வரும் கடுமையான தவம், நவீன மருத்துவ அறிவியலையே கேள்விக்குறியாக்கியுள்ளது.

நாட்டின் நலம் மற்றும் உலக அமைதிக்காகத் தன்னை அர்ப்பணித்துள்ள பையா தாஸ் ஜி மகாராஜ், கடந்த 37 ஆண்டுகளாக ஒரு நிமிடம் கூடத் தூங்கியதில்லை எனக் கூறப்படுகிறது. “இந்த 37 ஆண்டுகளில் நான் ஒருமுறை கூட படுத்து ஓய்வெடுத்ததில்லை. அமர்ந்த நிலையிலோ அல்லது நின்ற நிலையிலோ மட்டுமே அனுமன் பக்தியில் ஆழ்ந்திருப்பேன்” என அவர் நெகிழ்ச்சியுடன் கூறுகிறார்.

இந்த மகானின் தவ வாழ்வு பல்வேறு வியக்கத்தக்க நிலைகளைக் கடந்து வந்துள்ளது. அதன் படி 37 ஆண்டுகளாகத் தூக்கத்தைத் துறந்து தியானத்தில் ஈடுபடுதல். சுமார் 16 ஆண்டுகள் திட உணவைத் தவிர்த்து, பழங்கள் மற்றும் திரவ உணவுகளை மட்டுமே உட்கொண்டு உயிர் வாழ்தல். ஆன்மீக அமைதிக்காக தொடர்ந்து மூன்றரை ஆண்டுகள் மௌன விரதம் கடைபிடித்தது. ஆன்மீக விழிப்புணர்விற்காக சுமார் 45,000 கிலோமீட்டர் தூரம் பயணம் மேற்கொண்டது என பல வியக்கத்தக்க செயல்களை செய்துள்ளார்.

சுமார் 18 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட இந்த ஆலயத்தின் புகழ் தற்போது ஏழு கடல்களைத் தாண்டிப் பரவியுள்ளது. ஹரியானா, உத்தரப் பிரதேசம் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் இங்கு வருகை தருகின்றனர்.

இத்தலத்தில் 21 நாட்கள் தங்கியிருந்து ‘சீதா ராம்’ திருநாமத்தை உச்சரித்துக்கொண்டு வலம் வரும் பக்தர்களின் வேண்டுதல்கள், ஹனுமானின் அருளால் நிச்சயம் நிறைவேறும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.

வழிபாடு மட்டுமல்லாது, இந்த ஆசிரமம் மிகச்சிறந்த சேவை மையமாகவும் திகழ்கிறது. இங்குள்ள பிரம்மாண்ட கோசாலையில் நூற்றுக்கணக்கான பசுக்கள் பராமரிக்கப்படுகின்றன. மேலும், ஜாதி, மத பேதமின்றி தினமும் ஆயிரக்கணக்கானோருக்கு அன்னதானம் (சமூக விருந்து) வழங்கப்பட்டு வருகிறது.

“எனது இந்த ஆன்மீகப் பயணம் எனக்கானது அல்ல; இது நாட்டின் முன்னேற்றத்திற்காகவும், உலக அமைதிக்காகவும் நான் மேற்கொள்ளும் சிறு முயற்சி” என்கிறார் பையா தாஸ் ஜி மகாராஜ்.