உறுதியான எண்ணம் இருந்தால், எந்தச் சவாலும் தடையில்லை என்பதை டெல்லி காவல்துறையைச் சேர்ந்த பெண் காவலர் ஒருவர் நிரூபித்துள்ளார். அவர் பெயர் சோனிகா யாதவ். சோனிகா, ஏழு மாத கர்ப்பிணியாக இருந்தபோதும், வெயிட் லிஃப்டிங் (பாரம் தூக்கும்) சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொண்டுள்ளார். ஆந்திரப் பிரதேசத்தில் நடந்த அகில இந்திய போலீஸ் வெயிட் லிஃப்டிங் கிளஸ்டர் 2025–26 போட்டியில் மேடை ஏறிய சோனிகா, மொத்தம் 145 கிலோ எடையைத் தூக்கி அங்கிருந்த அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

இந்தக் கடுமையான சூழ்நிலையில் அவர் களமிறங்கியபோது, அவர் ஒரு வரலாற்றைப் படைக்கப் போகிறார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. எதிர்பாராத விதமாக, தனது உடல்நிலையின் சவால்களை எல்லாம் கடந்து சோனிகா யாதவ் போட்டியில் சிறப்பாகச் செயல்பட்டார். அவர் தனது பிரிவுக்கான போட்டியில் வெண்கலப் பதக்கத்தை (Bronze Medal) வென்று சாதனை படைத்துள்ளார்.

ஏழு மாத கர்ப்பம், அதிக எடையைத் தூக்குவது போன்ற மிகப் பெரிய சவால்களை வெற்றிகரமாகச் சமாளித்து அவர் பெற்ற இந்தப் பதக்கம், அவருடைய தன்னம்பிக்கை, தைரியம் மற்றும் மன உறுதியை எடுத்துக்காட்டுகிறது. அவரது இந்தச் சாதனைக்காக, நாடு முழுவதும் இருந்து அவருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.