15 வயது சிறுமி ஒருவரின் ஏழு மாத கால 27 வாரங்கள் கர்ப்பத்தை கலைக்க அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் ஏற்கனவே வழங்கிய தீர்ப்பை எதிர்த்து, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை தற்போது சீராய்வு மனுவைத் தாக்கல் செய்துள்ளது. இந்த விவகாரத்தை தலைமை நீதிபதி சூர்யா காந்த் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. முன்னதாக, சிறுமி பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர் என்பதைக் கருத்தில் கொண்டு, அவரது உடல் மற்றும் மன நலனைக் காக்க சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி நீதிமன்றம் கருக்கலைப்புக்கு அனுமதி அளித்திருந்தது.

இருப்பினும், 27 வாரங்கள் என்பது கருவின் வளர்ச்சி முழுமையடைந்திருக்கும் காலம் என்பதால், இந்த நிலையில் கருக்கலைப்பு செய்வது மருத்துவ ரீதியாகவும், தார்மீக ரீதியாகவும் சிக்கலானது என எய்ம்ஸ் மருத்துவர்கள் தரப்பில் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியாவின் மருத்துவக் கருக்கலைப்பு சட்டத்தின்படி, பொதுவாக 24 வாரங்கள் வரை மட்டுமே கருக்கலைப்பு செய்ய அனுமதி உண்டு. அதற்கு மேற்பட்ட காலத்திற்கு நீதிமன்றத்தின் சிறப்பு அனுமதி அவசியம். இந்த வழக்கில், உயிருடன் பிறக்க வாய்ப்புள்ள கருவின் உரிமைகள் மற்றும் பாதிக்கப்பட்ட சிறுமியின் எதிர்காலம் ஆகிய இரண்டுக்கும் இடையே ஒரு இக்கட்டான சூழல் நிலவுகிறது.

இதனால் எய்ம்ஸ் மருத்துவமனையின் அறிக்கையைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தில் மறுபரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயம் உச்ச நீதிமன்றத்திற்கு ஏற்பட்டுள்ளது. வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு நீதி வழங்குவதில் உள்ள சட்டச் சிக்கல்களையும், மருத்துவ நெறிமுறைகளையும் ஒருசேர விவாதிக்கும் மிக முக்கியமான வழக்காக இது பார்க்கப்படுகிறது.