தமிழ்நாட்டில் தனித்து நின்று 108 இடங்களைக் கைப்பற்றி, கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியைப் பிடித்துள்ள தவெக தலைவர் விஜய்க்கு, தற்போது ஆளும் கூட்டணியில் ஏற்பட்டுள்ள விரிசல்கள் பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளன. நிர்வாகத்தின் நாளாந்த முடிவுகள், கொள்கை திட்டங்கள் மற்றும் நிதி ஒதுக்கீடுகளில் கூட்டணி கட்சிகள் செலுத்தும் கடுமையான அழுத்தம் முதல்வர் விஜய்க்கு அரசியல் ரீதியாக ஒரு பெரிய சுமையாக மாறியுள்ளது.

இதனால், இந்தத் தளர்வான பிடிகளிலிருந்து முழுமையாக விடுபட்டு, எதிர்காலத்தில் தவெக தனித்து ஆட்சி அமைக்கும் வகையில் தனிப்பெரும்பான்மையை எட்ட வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார். தேர்தலுக்குப் பிறகு முதல்வர் விஜய் ஒரு தொகுதியிலும், அதிமுகவிலிருந்து விலகி தவெகவில் இணைந்தவர்கள் மூலமாகவும் தற்போது சட்டமன்றத்தில் 7 இடங்கள் காலியாக உள்ளன.

இந்தச் சூழலில், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தத் தவறியதாகக் கூறி இடதுசாரிக் கட்சிகள் போராட்டங்களை அறிவித்துள்ளதும், 2029 மக்களவைத் தேர்தலில் ராகுல்காந்தியைப் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தக் காங்கிரஸ் கோருவதும், வடஇந்தியாவில் விஜயை தேசிய தலைவராகக் காட்டும் பிரச்சாரமும் இரு கட்சிகளுக்கும் இடையே மோதலை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், விசிக தரப்பிலிருந்து கூடுதல் அதிகாரமும் முக்கியப் பொறுப்புகளும் கோரப்படுவதால், கூட்டணிக்குள் நாளுக்கு நாள் கருத்து வேறுமைகள் அதிகரித்து வருகின்றன. காங்கிரஸ், இடதுசாரிகள் மற்றும் விசிக உள்ளிட்ட கட்சிகளின் நிபந்தனைகளுக்குத் தலைவணங்கும் தற்போதைய கட்டாயத்தை முடிவுக்குக் கொண்டுவரவே, காலியாக உள்ள 7 தொகுதிகளுக்கும் விரைவில் இடைத்தேர்தலை நடத்தி தனிப்பெரும்பான்மையைப் பெற விஜய் திட்டமிட்டுள்ளார்.

“>

 

இதற்காக நீதிமன்ற வழக்குகளை விரைந்து முடிக்கத் தீவிரமாக இறங்கியுள்ள அவர், எப்படியாவது சொந்த பலத்தில் ஆட்சியைத் தக்கவைக்கும் மாஸ்டர் பிளானில் களமிறங்கியுள்ளார். கூட்டணி அழுத்தங்களிலிருந்து தப்பிக்க விஜய் கையில் எடுத்துள்ள இந்த இடைத்தேர்தல் அஸ்திரம் தமிழக அரசியல் களத்தில் அடுத்தடுத்து பெரும் திருப்பங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.