ஐபிஎல் 2026 தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிரடி வீரர் ஊர்வில் படேல் வெறும் 13 பந்துகளில் அரைசதம் அடித்து புதிய வரலாறு படைத்துள்ளார்.

லக்னோ பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்த ஊர்வில் படேல், 2 பவுண்டரிகள் மற்றும் 7 மெகா சிக்ஸர்களுடன் 13 பந்துகளில் தனது அரைசதத்தைப் பூர்த்தி செய்தார். இதன் மூலம் 2023-ஆம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் (13 பந்துகள்) படைத்த ‘மின்னல் வேக அரைசதம்’ சாதனையை ஊர்வில் சமன் செய்துள்ளார். இதற்கு முன்பு கே.எல்.ராகுல் 14 பந்துகளிலும், 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி 15 பந்துகளிலும் அரைசதம் அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இன்றைய போட்டியில் மூன்றாவது வீரராகக் களம் இறங்கிய ஊர்வில், ஆவேஷ் கான் வீசிய பந்துகளில் தொடர்ந்து 3 சிக்ஸர்களை விளாசி ஆட்டத்தைத் தொடங்கினார். தொடர்ந்து திக்வேஷ் ரதி வீசிய 6-வது ஓவரில் மட்டும் 3 சிக்ஸர், 1 பவுண்டரி என 25 ரன்களைக் குவித்தார். இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியின் பந்துவீச்சிலும் சிக்ஸர்களைப் பறக்கவிட்டு, 13-வது பந்தில் ஒரு ரன் எடுத்து வரலாற்றுச் சாதனையை எட்டினார்.

சாதனை படைத்த பிறகு மைதானத்தில் ஊர்வில் படேல் செய்த செயல் அனைவரையும் நெகிழ வைத்தது. தனது பாக்கெட்டிலிருந்து ஒரு காகிதத்தை எடுத்து கேமரா முன் காட்டினார். அதில் “இது உங்களுக்காக அப்பா” (This is for you Papa) என்று எழுதப்பட்டிருந்தது. இந்த வெற்றியைத் தனது தந்தைக்குச் சமர்ப்பிப்பதாக அவர் உணர்ச்சிகரமாகத் தெரிவித்தார்.

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 27 வயதான உர்வில் படேல், உள்நாட்டுப் போட்டிகளில் சிறப்பாக விளையாடியதன் மூலம் சிஎஸ்கே அணியால் அடையாளம் காணப்பட்டு, இன்று ஐபிஎல் வரலாற்றில் தனது பெயரைப் பொறித்துள்ளார்.