மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த ஜுவான் பெட்ரோ பிராங்கோ, 600 கிலோ உடல் எடையுடன் ‘உலகின் அதிக எடை கொண்ட மனிதர்’ என கின்னஸ் சாதனை படைத்தவர். அதீத உடல் பருமனால் படுக்கையை விட்டு நகர முடியாமல் அவதிப்பட்ட இவருக்கு சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகளும் இருந்தன. மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில், இரண்டு அறுவை சிகிச்சைகள் மற்றும் கடுமையான உணவுக் கட்டுப்பாடுகள் மூலம் தனது எடையைப் பாதியாகக் குறைத்து 260 கிலோவாக மாற்றினார். கடந்த 2020-ம் ஆண்டு இவரைத் தாக்கிய கொரோனா தொற்றிலிருந்தும் மன உறுதியோடு மீண்டு வந்து சாதனை படைத்தார்.
புது வாழ்வைத் தொடங்கப் போராடிய ஜுவான், துரதிர்ஷ்டவசமாக அண்மையில் ஏற்பட்ட கடுமையான சிறுநீரகத் தொற்று காரணமாக உயிரிழந்தார். இவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர், உடல் பருமன் என்பது ஒரு தனிப்பட்ட தோல்வி அல்ல, அது ஒரு தீவிரமான மருத்துவ நோய் என்று வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார். உடல் எடையைக் குறைத்து விடாமுயற்சியுடன் போராடிய ஒரு மனிதனின் பயணம் இவ்வாறு முடிவுக்கு வந்தது மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
