சென்னை விமான நிலையத்தின் பெண்கள் ஓய்வறையில் சானிட்டரி நாப்கின் வழங்கும் இயந்திரங்கள் இல்லாததால் தாங்கள் கடும் அவதிக்குள்ளானதாகச் சின்னத்திரை நடிகை லதா ராவ் பகிரங்கமாகப் புகார் தெரிவித்திருந்தார். இந்த விவகாரம் சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் பெரும் விவாதத்தைக் கிளப்பிய நிலையில், உடனடியாக விழித்துக்கொண்ட விமான நிலைய நிர்வாகம் இது தொடர்பாக விரிவான விளக்கத்தை வெளியிட்டுள்ளது.

இது குறித்து விளக்கம் அளித்துள்ள அதிகாரிகள், விமான நிலையத்திலுள்ள பெண்கள் ஓய்வறைகளில் முன்பு நாப்கின் வெண்டிங் மெஷின்கள் செயல்பாட்டில்தான் இருந்தன என்று தெரிவித்தனர். இருப்பினும், அந்த இயந்திரங்களைச் சிலர் தவறாகப் பயன்படுத்துவதாகவும் சேதப்படுத்துவதாகவும் தொடர்ச்சியாகப் புகார்கள் வந்ததால், அந்தத் திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் விளக்கமளித்தனர்.

இதற்கு மாற்றாகப் பயணிகள் அவசரத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் தற்காலிக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒவ்வொரு பெண்கள் ஓய்வறையிலும் அவசரத் தேவைக்குத் தொடர்பு கொள்ள வேண்டிய பிரத்யேகத் தொலைபேசி எண் சுவர்களில் எழுதப்பட்டுள்ளது. அந்த எண்ணைத் தொடர்பு கொண்டால் அடுத்த இரண்டு நிமிடங்களுக்குள் விமான நிலைய பெண் ஊழியர் நேரில் வந்து சானிட்டரி நாப்கினை வழங்குவார் என்றும், இது தற்காலிக ஏற்பாடுதான் என்றும் விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.