தமிழகம் முழுவதும் உள்ள பெரும்பாலான பத்திரப்பதிவு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய அதிரடி வேட்டையில், கணக்கில் வராத பல லட்ச ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் தற்போது 64 பேர் மீது எஃப்.ஐ.ஆர் (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் 4ஆம் தேதி சுபமுகூர்த்த நாளை முன்னிட்டு, பொதுமக்களின் நடமாட்டம் அதிகமாக இருந்ததைப் பயன்படுத்தி, சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள 60-க்கும் மேற்பட்ட சார்பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் அதிரடி சோதனையில் இறங்கினர்.

இந்த அதிரடி சோதனையின் முடிவில், கணக்கில் காட்டப்படாத சுமார் 37.75 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் கட்டுக் கட்டாகப் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த மெகா ஊழல் முறைகேடு தொடர்பாக இதுவரை 10 தனித்தனி வழக்குகள் பதியப்பட்டு, அதிகாரிகள், இடைத்தரகர்கள் மற்றும் ஆவண எழுத்தர்கள் உள்ளிட்ட 64 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை முறைப்படி வழக்குப்பதிவு செய்து தங்களது பிடியை இறுக்கியுள்ளதால் அரசு வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.