உத்தரப்பிரதேச மாநிலத்தின் மிர்சாபூர் மாவட்டத்தில் நடந்த இந்த சம்பவம், அனைவருக்கும் ஒரு எடுத்துக்காட்டாக மாறியுள்ளது.

கோபால்பூர் கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண் குடும்ப தகராறு காரணமாக விஷம்  குடித்தார். தாயின் நிலைமையை பார்த்த 6 வயது சிறுமி சிவானி, அச்சப்படாமல் உடனடியாக “விமென் பவர் லைன் – 1090” என்ற அவசர உதவி எண்ணுக்கு அழைப்பு விட்டார். தொலைபேசியில், “என் அம்மா விஷம்  குடித்துவிட்டார், எனக்கு ஆம்புலன்ஸ் வேண்டும், தயவு செய்து விரைவாக அனுப்புங்கள்” என்று அழுதபடி கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

அந்த அழைப்பை பெற்ற  போலீசார் மற்றும் PRV-112 அவசர உதவி குழு உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்றனர். பெண் தீவிர நிலையில் இருந்ததால், அவரை உடனடியாக  மருத்துவ மையத்திற்கு கொண்டு சென்றனர். சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டதால், அந்த பெண்ணின் உயிரை காப்பாற்ற முடிந்தது. போலீசார் தெரிவித்ததாவது, சிறுமி சிவானி காட்டிய துணிச்சலும், திடமான முடிவும் “மிஷன் சக்தி” திட்டத்தின் வெற்றியை பிரதிபலிக்கின்றன என்றனர்.

மிஷன் சக்தி திட்டத்தின் கீழ் பள்ளிகளில் மாணவ, மாணவியருக்கு 1090, 112, 181 போன்ற அவசர உதவி எண்கள் பற்றிய விழிப்புணர்வு அளிக்கப்படுகிறது. அதேபோல், இந்த திட்டத்தின் மூலம் தான் சிவானி அந்த எண்களை நினைவில் வைத்திருந்தார்.

சரியான நேரத்தில் அதைப் பயன்படுத்தியதால் தாயின் உயிரை காப்பாற்ற முடிந்தது. அதிகாரி மனீஷ் குமார் மிஸ்ரா கூறியதாவது, “சிவானியின் விழிப்புணர்வும் துணிச்சலும் சமூகத்துக்கு ஒரு பெரிய செய்தியாகும். சிறு வயதிலேயே பெரிய தைரியம் காட்ட முடியும் என்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டு இதுவாகும்” என்றார்