கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டம் சாலிகிராமம் டவுன் பகுதியைச் சேர்ந்த லோகித் என்பவர், காங்கிரஸ் கட்சியின் பிரமுகர். இவர் அப்பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணுடன் காதல் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. இருவரும் பல்வேறு இடங்களுக்கு சென்று சுற்றித்திரிந்துள்ளனர். இந்த தகவல் அந்த இளம்பெண்ணின் பெற்றோருக்கு தெரியவந்ததைத் தொடர்ந்து, அவர்கள் பெண்ணுக்கு வேறொரு இடத்தில் திருமணம் செய்து வைத்தனர்.
சமீபத்தில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அந்த இளம்பெண் பெற்றோர் வீட்டுக்கு வந்திருந்தார். அப்போது, லோகித் தனது சமூக வலைதள பக்கங்களில், அந்த இளம்பெண்ணுடன் இருந்த உல்லாச வீடியோவை வெளியிட்டதாக கூறப்படுகிறது.
அந்த வீடியோவை பார்த்த பெண் அதிர்ச்சி அடைந்து, உடனே பெற்றோரிடம் தெரிவித்தார். பின்னர் அவர்கள் சாலிகிராமம் டவுன் போலீசில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், அந்த வீடியோ சுமார் மூன்று மாதங்களுக்கு முன்பு இருவரும் காதலித்துக் கொண்டிருந்த காலத்தில், ஒரு தோட்டத்தில் எடுக்கப்பட்டதாகவும், லோகித் அதை மறைமுகமாக பதிவு செய்திருந்ததாகவும் தெரியவந்தது.
அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடியாததால், பழிவாங்கும் நோக்கில் லோகித் அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டதாக போலீசார் கூறினர்.
இதையடுத்து லோகித்தை போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மேலும் அவர் நீதிமன்ற உத்தரவின்படி அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
