
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே வடக்கு ஊரணங்குடியைச் சேர்ந்தவர் சங்கர் (42). இவரும் கூடலூரைச் சேர்ந்த பாகம்பிரியாள் (36) என்ற பெண்ணுடன் ஓராண்டுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இருவரும் இதற்கு முன் விவாகரத்து பெற்றவர்களாவர்.
இந்நிலையில், பாகம்பிரியாள் 6 மாத கர்ப்பிணியாக இருந்த போது, கரு வளர்ச்சி குறைவாக இருந்ததால், தேவகோட்டை அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் கருக்கலைப்பு செய்ததாக தெரிகிறது.
இந்தச் சம்பவத்துக்குப் பின்னர், கணவன்–மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இன்று காலை பாகம்பிரியாள், முகத்தில் பலத்த காயங்களுடன் அவரது வீட்டில் சடலமாக கிடந்தார்.
தகவல் அறிந்த திருப்பாலைக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறிய பாகம்பிரியாவின் அண்ணன் நாகரத்தினம் அளித்த புகாரின் பேரில், சங்கரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.