ஹெலிகாப்டர் மற்றும் விமான பயணத்திற்கு நேபாள அரசு தடை விதித்துள்ளது..

எவரெஸ்ட் அருகே ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்ததை அடுத்து, நேபாள அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அத்தியாவசியமற்ற ஹெலிகாப்டர் பயணத்திற்கு இரண்டு மாதங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நேபாளத்தின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் (CAAN) செப்டம்பர் வரை மலை விமானங்கள், ஸ்லிங் விமானங்கள் மற்றும் அத்தியாவசியமற்ற விமானங்கள் (Non-Essential Flights) ஆகியவற்றுக்கு தடை விதித்துள்ளது. ஹெலிகாப்டர்களும் இந்த வரம்பிற்குள் வரும் என்று நேபாள விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.

நேபாளத்தில் உள்ள எவரெஸ்ட் சிகரம் அருகே தனியார் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் விமானி உட்பட 5 மெக்சிகோ நாட்டவர்கள் உயிரிழந்தனர். ஹெலிகாப்டரை ஓட்டியவர் மூத்த விமானி சேட் குருங் என அடையாளம் காணப்பட்டார். எவரெஸ்ட் உள்ளிட்ட உயரமான மலைச் சிகரங்கள் அமைந்துள்ள சொலுகும்பு மாவட்டத்தில் உள்ள சுர்கு விமான நிலையத்திலிருந்து காத் மாண்டு நோக்கிச் சென்றபோது ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக விளக்கம் அளிக்கப்பட்டது.

9N-AMV என்ற அழைப்புக் குறியுடன் கூடிய ஹெலிகாப்டர், சொலுகும்புவில் உள்ள சுர்கியில் இருந்து புறப்பட்ட 15 நிமிடங்களில் கட்டுப்பாட்டு நிலையத்துடனான தொடர்பை இழந்தது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த அரசு விசாரணைக் குழுவை அமைக்கும் என்று விமானப் போக்குவரத்து அதிகாரி ஞானேந்திர புல் நேபால் தெரிவித்தார். பாதகமான வானிலை காரணமாக ஹெலிகாப்டரின் பாதை மாறியதால் இந்த விபத்து நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

உலகின் மிக உயரமான மலையான எவரெஸ்ட் உட்பட நாட்டின் உயரமான சிகரங்களைக் காண விரும்பும் சுற்றுலாப் பயணிகளுக்காக மனங் ஏர்… ஹெலிகாப்டரை இயக்குகிறது. விபத்துக்கான காரணங்கள் இன்னும் தெரியவில்லை…. இந்த ஆண்டு ஜனவரி மாதம், தலைநகர் காத்மாண்டுவில் இருந்து காஸ்கி மாவட்டத்தில் உள்ள பொக்ராவுக்கு சென்று கொண்டிருந்த யதி ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மொத்தம் 72 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.