சமீபத்தில் விளைந்த தக்காளியை விற்று பல லட்சம் லாபம் ஈட்டிய விவசாயி கொள்ளை கும்பலால் கொல்லப்பட்டார்..

ஆந்திர மாநிலம் அன்னமயா மாவட்டத்தில் உள்ள மதனப்பள்ளி மண்டலம் போடிமல்லடின்னே கிராமத்தைச் சேர்ந்த 62 வயதான நரிம் ராஜசேகர் ரெட்டி என்ற விவசாயி கொலையாளிகளால் கொல்லப்பட்டார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சந்தையில் தக்காளி விற்றதன் மூலம் ரூ.30 லட்சம் சம்பாதித்ததாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இவர் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் மனைவியுடன் வசித்து வந்தார்.

அறுவடை முடிந்து 70 கூடை தக்காளியை சந்தையில் விற்று சுமார் 30 லட்சம் ரூபாய் கிடைத்ததாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அவரை மிரட்டி பணம் பறிப்பதற்காக அந்த கும்பல் தாக்கியதாக போலீசார் தெரிவித்தனர். செவ்வாய்கிழமை இரவு பால் விநியோகம் செய்வதற்காக கிராமத்திற்கு சென்றபோதே இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது.

அப்போது எதிர்பாராதவிதமாக அந்த இடத்திற்கு வந்த தாக்குதல் கும்பல் அவரை தடுத்து நிறுத்தி மரத்தில் கட்டி வைத்து கொன்றுள்ளனர். அவரது கால்கள் மற்றும் கைகள் பட்டு நூலால் கட்டப்பட்டு, கழுத்தில் துணி கட்டி கழுத்தில் நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாக சர்க்கிள் இன்ஸ்பெக்டர் சத்தியநாராயணா செய்தியாளர்களிடம் தெரிவித்தார். விவசாயியிடமிருந்து பணத்தை திருடுவதற்காக ஆசாமிகள் வந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். ராஜசேகர் ரெட்டிக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இதற்கிடையில், தக்காளி விலை தற்போது கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. வட இந்திய மாநிலங்களில் தக்காளி விலை 250 ரூபாயை தாண்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கேரளாவில் தக்காளி விலை 100 முதல் 150 வரை உள்ளது. கடந்த நாள் 2000 பெட்டி தக்காளி விற்ற கோலாரை சேர்ந்த விவசாயி குடும்பத்திற்கு ரூ.38 லட்சம் கிடைத்தது.  தக்காளி விலை வீழ்ச்சியால் சில மாதங்களுக்கு முன் தக்காளி சாகுபடியை கைவிடும் நிலைக்கு தள்ளப்பட்ட விவசாயிகள் தற்போது அதிக விலைக்கு விற்கின்றனர்.

அதே நேரத்தில், தக்காளி விலை உயர்ந்து வரும் நிலையில், அதன் விலையை கட்டுப்படுத்த மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது வழங்கல் அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களில் இருந்து தக்காளி கொள்முதல் செய்து, விலை உயர்வு அதிகமாக உள்ள இடங்களுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் தக்காளி உற்பத்தி செய்யப்பட்டாலும், தெற்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் உற்பத்தி 56%-58% ஆகும். இங்கு அதிகளவில் விளைவிக்கப்படும் தக்காளி மற்ற இடங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது.