ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் கோத்தபேட்டையைச் சேர்ந்த சீனிவாச ராவ் என்பவரின் மகன் முரளி கிருஷ்ணா (16), கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஒன்பதாம் வகுப்பு பயின்றபோது, அவரது நண்பர்கள் ரூ.50 தருவதாகக் கூறி விடுத்த சவாலை ஏற்று ஒரு பேனாவை விழுங்கியுள்ளார்.

அன்று முதல் அவ்வப்போது வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த அந்த மாணவன், பயத்தின் காரணமாகப் பெற்றோரிடம் உண்மையை மறைத்துள்ளார். இந்நிலையில், தற்போது முதலாமாண்டு கல்லூரிப் படிப்பைத் தொடங்கும் நிலையில், கடந்த 18-ஆம் தேதி முரளி கிருஷ்ணாவுக்கு தாங்க முடியாத வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. அப்போது அவரது நண்பர்கள் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விபரீதச் செயலைப் பெற்றோரிடம் தெரிவிக்க, அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக குண்டூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட விரிவான பரிசோதனையில், மாணவனின் பெருங்குடல் பகுதியில் பேனா சிக்கியிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன்பின்னர், மருத்துவர்கள் குழுவினர் அதிநவீன ‘ரெட்ரோகிரேட் எண்டோஸ்கோபி’ முறையைப் பயன்படுத்தி, எவ்வித அறுவை சிகிச்சையுமின்றி வெற்றிகரமாக அந்தப் பேனாவை வெளியே எடுத்தனர்.

மூன்று ஆண்டுகளாகப் பெரும் இன்னலைத் தந்து வந்த பேனா அகற்றப்பட்டதைத் தொடர்ந்து, மாணவன் தற்போது நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சிறுவர்களின் விபரீத விளையாட்டு குறித்து பெற்றோர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.