50 தோசை சாப்பிடும் சவால் என்றால் கேட்பவர்களுக்கே சற்று மலைப்பாக இருக்கும். இதுபோன்ற உணவு சவால்கள் தொடர்பான காணொளிகள் சமூக வலைதளங்களில் அடிக்கடி வெளியாகி வருகின்றன. அந்த வகையில், பிரபல டிஜிட்டல் படைப்பாளரான ஹர்ஷ் போயிர் வெளியிட்ட ‘50 தோசை சவால்’ காணொளி தற்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. தனிநபர் ஒருவர் 50 தோசைகளை எப்படி சாப்பிடப் போகிறார் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில் காணொளி தொடங்குகிறது. ஆனால், அடுத்த சில நொடிகளிலேயே அதில் இடம்பெற்றுள்ள சுவாரஸ்யமான திருப்பம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
காணொளியின் தொடக்கத்தில் பெரிய அளவிலான தோசைகள் இருப்பது போன்ற காட்சிகள் காட்டப்படுகின்றன. இதைப் பார்த்த பலரும் உண்மையிலேயே 50 பெரிய தோசைகளை சாப்பிடும் சவால் என நினைத்துள்ளனர். ஆனால், அடுத்ததாக 50 தட்டுகள் காட்டப்பட்டபோது காட்சி முற்றிலும் மாறுகிறது. ஒவ்வொரு தட்டிலும் பெரிய தோசைக்கு பதிலாக மிகவும் சிறிய அளவிலான தோசைகள் வைக்கப்பட்டிருந்தன. அதனுடன் சிறிதளவு உருளைக்கிழங்கு மசாலா மற்றும் சட்னியும் இடம்பெற்றிருந்தன. இதைப் பார்த்த இணையவாசிகள், சவாலின் வித்தியாசமான அணுகுமுறையை ரசித்து வருகின்றனர்.
View this post on Instagram
இந்த காணொளி சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து, அதற்கு ஏராளமானோர் நகைச்சுவையான கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். உணவு விநியோக நிறுவனமான ஸ்விக்கி இந்தியாவும் இந்த காணொளுக்கு நகைச்சுவையாக கருத்து தெரிவித்துள்ளது. ஒரு சிலர், 50 தோசை என்று கூறியதால் பெரிய தோசைகளை எதிர்பார்த்ததாகவும், ஆனால் சிறிய தோசைகளைப் பார்த்ததும் சிரிப்பு வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர். மற்றொருவர் இதை சர்வதேச அளவிலான சவால் என நகைச்சுவையாகக் குறிப்பிட்டுள்ளார். தோசையின் அளவு சிறியதாக இருந்தாலும், தோசை தோசைதான் என்றும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
வித்தியாசமான உணவு சவால்கள் மற்றும் நகைச்சுவை காணொளிகள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து வரவேற்பைப் பெற்று வருகின்றன. அந்த வரிசையில், ஹர்ஷ் போயிரின் இந்த 50 தோசை சவாலும் தற்போது இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. பெரிய அளவில் தொடங்கி, குட்டி குட்டி தோசைகளாக மாறிய இந்த எதிர்பாராத திருப்பமே காணொளியின் முக்கிய சுவாரஸ்யமாக அமைந்துள்ளது. இதனால் காணொளி சமூக வலைதளங்களில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. உணவு சவால் என்ற பெயரில் வெளியான இந்த நகைச்சுவையான முயற்சி, இணையவாசிகளுக்கு ரசிக்கக்கூடிய ஒரு பொழுதுபோக்கு காணொளியாக மாறியுள்ளது.
