குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் 76 வயது மூதாட்டி ஒருவர் காணாமல் போன நிலையில், பின்னர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிச்சை எடுத்து வாழ்க்கை நடத்தி வந்த லீலா சோலங்கி என்ற மூதாட்டி, ஆகஸ்ட் 19-ஆம் தேதி கோயில் அருகே வழக்கம்போல் இருந்ததாகக் கூறப்படுகிறது. அவரை அவரது பேரன் காலை நேரத்தில் அங்கு விட்டுச் சென்ற நிலையில், மாலை திரும்பி வந்தபோது மூதாட்டியைக் காணவில்லை. இதையடுத்து குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்து அவரைத் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

மூதாட்டியின் உடல் ஆகஸ்ட் 21-ஆம் தேதி  அணைப் பகுதியில் கண்டெடுக்கப்பட்டது. ஆரம்பத்தில் இந்தச் சம்பவம் சந்தேகத்துக்கிடமான மரணம் என்ற கோணத்தில் விசாரிக்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். உடற்கூராய்வு உள்ளிட்ட தடயவியல் ஆய்வுகளுக்குப் பிறகு, சம்பவத்தில் குற்றச்செயல் இருக்கலாம் என்ற சந்தேகம் போலீஸாருக்கு ஏற்பட்டது. இதையடுத்து மூதாட்டி கடைசியாக இருந்த இடத்துக்கும், உடல் மீட்கப்பட்ட பகுதிக்கும் இடையிலான பாதையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன.

அந்தக் காட்சிகளின் அடிப்படையில், மூதாட்டியை ஆட்டோவில் அழைத்துச் சென்றதாகக் கூறப்படும் ஓட்டுநர் ரமேஷ் வைதுகியா என்பவர் போலீஸாரின் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டார். விசாரணையில், ஆகஸ்ட் 19-ஆம் தேதி மாலை கோயில் அருகே இருந்து மூதாட்டியை ஆட்டோவில் அழைத்துச் சென்றதாக அவர் தெரிவித்ததாக போலீஸார் கூறினர். பின்னர் அஜி அணைப் பகுதியை நோக்கிச் சென்றதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.விசாரணையில், அந்த மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரியவந்துள்ளது  இந்தச் சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து, குற்றச்சாட்டுகளின் முழு பின்னணியையும் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

கைது செய்யப்பட்டுள்ள நபர் மீது ஏற்கெனவே பல்வேறு தீவிர குற்ற வழக்குகள் இருந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர். கடந்த காலங்களில் கொலை, கொள்ளை உள்ளிட்ட வழக்குகளில் அவரது பெயர் இடம்பெற்றிருந்ததாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக, சிறுமி தொடர்பான பழைய வழக்கில் அவர் தண்டனை பெற்றிருந்த நிலையில், 2026-ஆம் ஆண்டு குஜராத் உயர் நீதிமன்றம் அந்த வழக்கில் அவரை விடுவித்திருந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. தற்போதைய சம்பவத்தில் கிடைத்த கண்காணிப்பு கேமரா காட்சிகள், தடயவியல் தகவல்கள் மற்றும் பிற ஆதாரங்களின் அடிப்படையில் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.