கேரள மாநிலம் வண்டானம் அரசு மருத்துவக் கல்லூரியில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அறுவை சிகிச்சை செய்துகொண்ட உஷா ஜோசப் (51) என்ற பெண்ணின் வயிற்றில், அறுவை சிகிச்சையின் போது பயன்படுத்தப்படும் கத்தரிக்கோல் (Forceps) மறதியாக வைத்து தைக்கப்பட்ட அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு கருப்பை கட்டி அறுவை சிகிச்சைக்குப் பிறகு தொடர்ந்து வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த உஷாவுக்கு, அது கிட்னி கல் என்று கூறி அரசு மருத்துவமனை அலட்சியமாகப் பதிலளித்துள்ளது. சமீபத்தில் தனியார் மருத்துவமனையில் எடுக்கப்பட்ட எக்ஸ்ரே சோதனையில், அவரது வயிற்றில் உலோகக் கருவி இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இந்தச் சம்பவம் கேரள அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. ஐந்து ஆண்டுகளாகத் தனது உடலில் ஒரு இரும்புக்கருவியுடன் நரக வேதனையை அனுபவித்த பெண்ணுக்கு நீதி கேட்டு காங்கிரஸ் கட்சி போராட்டத்தை அறிவித்துள்ளது. “அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் வெடிக்கும்” என காங்கிரஸ் தலைவர் கே.சி. வேணுகோபால் எச்சரித்துள்ளார். மருத்துவமனை நிர்வாகம் இதுகுறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ள நிலையில், மீண்டும் அதே அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற அந்தப் பெண் அச்சம் தெரிவித்துள்ளார்.
