
துருக்கி சிரியா எல்லையில் கடந்த 6 ஆம் தேதி காலை 4:20 மணிக்கு பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவானது. இதனால் சிரியாவிலும் துருக்கியிலும் நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாகியது. இந்த நிலநடுக்கம் லெபனான், இஸ்ரேல், ஜோர்தான், கிரீன்லாந்து போன்ற அண்டை நாடுகளிலும் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் தற்போது வரை 18000 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும் 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர். இதனை அடுத்து மீட்பு பணிகளில் துருக்கி அரசுக்கு உதவுவதற்காக இந்தியா போன்ற பல்வேறு நாடுகள் உதவிக்கரம் நீட்டி வருகின்றது.
இந்த நிலையில் நிலநடுக்க அறிவியலாளரான இத்தாலி நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி கார்லோ டாக்லியோனி கூறியதாவது “துருக்கி டெக்டானிக் தட்டு பகுதிகளில் அமைந்துள்ளது. இந்த தட்டுகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலால் துருக்கி நாடு ஐந்து முதல் ஆறு மீட்டர் வரை நகர்ந்து இருக்கக்கூடும். மேலும் அண்டை நாடான சிரியாவுடன் ஒப்பிட்டு அளவில் மதிப்பிடப்பட்டுள்ளது. அரபிக்கா தட்டுதுடன் அனடோலியன் தட்டு நகர்ந்ததால் மட்டுமே இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் துருக்கியின் நிலப்பரப்பு கீழே ஒரு தட்டு மேற்கு நோக்கியும் மற்றொரு தட்டு கிழக்கு நோக்கியும் நகர்ந்துள்ளது. இதனாலேயே நான்கு தட்டுக்களும் ஒன்றுடன் ஒன்று மோதி இந்த பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது” என அவர் கூறியுள்ளார்.