சென்னை, நந்தனத்தில் உள்ள புரட்சி பாரதம் கட்சி தலைமையகத்தில் நிருபர்களை சந்தித்த கட்சித் தலைவர் மற்றும் எம்.எல்.ஏ. பூவை ஜெகன்மூர்த்தி, தமிழகத்தில் நிகழ்ந்த ஆணவப்படுகொலைக்கு எதிராக திமுக அரசு சட்டமன்றத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும், இந்த கொலைகளை தடுக்க தனியாக ஒரு சிறப்பு சட்டம் கொண்டு வர வேண்டும் என்றும், திமுக ஆட்சியில் மனித உரிமைகள் மீறப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும் குற்றம் சாட்டினார். “சமூக நீதி பேசும் திமுக, இவ்வளவு நாளாக ஆணவப்படுகொலை தடுக்கும் சட்டம் ஏன் கொண்டு வரவில்லை?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய அவர், நெல்லை கவின் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் எனவும், போலீசார் இந்த வழக்கில் கட்டப்பஞ்சாயத்து செய்யக்கூடாது என்றும் கூறினார். குற்றவாளிகள் மீது கடுமையான தண்டனை பெற்றுத்தரப்பட வேண்டும் என்றும், உளவுத்துறை முறையாக செயல்படவில்லை என்பதால்தான் இந்த கொலை நடந்ததாகவும் விமர்சித்தார்.
இதேபோல், திருவள்ளூர் சிறுவன் கடத்தல் வழக்கில் தன்னுடன் தொடர்பு இல்லை என்றும், “நான் ஒரு சட்டமன்ற உறுப்பினர் என்பதால் மக்கள் உதவி கேட்பது வழக்கம். மனு கொடுக்க நேரில் வருவார்கள். இதை வைத்து என்னை வேண்டுமென்றே வழக்கில் சிக்க வைத்துள்ளனர்” என தெரிவித்தார்.
மேலும், ஏடிஜிபி ஜெயராமுடன் தனக்கு எந்தவிதமான தொடர்பும் இல்லை என்றும் தெளிவுபடுத்திய பூவை ஜெகன்மூர்த்தி, “நாங்கள் தற்போது அதிமுக கூட்டணியில்தான் உள்ளோம். கொள்கை வேறு, தேர்தல் கூட்டணி வேறு. இதற்காகவே 5 சட்டமன்ற தொகுதிகள் கேட்க முடிவு செய்துள்ளோம்” எனக் கூறினார்.
வருகிற சனிக்கிழமை நெல்லையில் கவினின் பெற்றோரையும் நேரில் சந்திக்க உள்ளதாகவும், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு நிலைமை மிகவும் கேவலமாகிவிட்டதாகவும் அவர் சாடினார்.
