புனேவில் பார்ட் டைம் வேலைக்கு ஆசைப்பட்டு ரூ49 லட்சத்தை ஐடி இன்ஜினியர் இழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் வீட்டிலிருந்தே  வேலை பார்த்து சம்பாதிக்கலாம் என்ற விளம்பரங்கள் மூலம் ஏராளமான மோசடிகள் நடந்து வருவதாக தொடர் புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இதில் பெரும்பாலும் youtube வீடியோக்கள் பார்ப்பதன் மூலமாகவும், அதனை லைக் செய்வதன் மூலமாகவும் நீங்கள் சம்பாதிக்கலாம் என்றே விளம்பரப்படுத்தப்படுகிறது.

இதை நம்பி ஏராளமானோர் இந்த கவர்ச்சிகரமான விளம்பரத்தின் வலையில் விழுந்து தங்களது பணத்தை இழந்து வருகின்றனர். அந்த வகையில் புனேவில் ஐடி இன்ஜினியர் ஒருவர் இது போன்ற மோசடிக்காரர்களால் ஏமாற்றப்பட்டு தனது 49 லட்சம் ரூபாய் பணத்தை இழந்துள்ளார். மோசடிக்காரர்கள் அவரை whatsapp மூலம் அணுகி பார்ட் டைமில் யூட்யூபில் வீடியோ பார்ப்பதன் மூலம் உங்களால் சம்பாதிக்க முடியும் என கூறியதைத் தொடர்ந்து, இவரும் அவர்கள் கொடுக்கும் டாஸ்க்குகளை செய்துள்ளார். அதிலிருந்து நாள் ஒன்றுக்கு ரூபாய் 150 முதல் 350 ரூபாய் வரை கிடைத்துள்ளது.

அதன் பின் நீங்கள் முதலீடு செய்யும் பணத்திற்கு ஏற்ப 30 சென்ட் என்ற விகிதத்தில் அமெரிக்கன் டாலராக உங்களுக்கு அதீத லாபம் உடனடியாக பெற்றுத் தரப்படும் என மோசடிக்காரர்கள் கூறவே, இவர் அவர்களது பின்புலம்  எதையும் விசாரிக்காமல் பணத்தின் மீதான மோகத்தில் ரூ 49 லட்சம் ரூபாயை முதலீடு செய்துள்ளார்.

ஆனால் மோசடிக்காரர்கள் எந்த பணத்தையும் திரும்பி தரவில்லை. இதை தொடர்ந்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்படவே, புகார் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. படித்த ஐடி இன்ஜினியர் இப்படி மோசடிக்குள்ளானது பெரும் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.