உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்த சரண் சிங் என்பவர், சமீபத்தில் வாங்கிய தனது புதிய காருக்குப் பெட்ரோல் நிரப்புவதற்காக அருகில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றிற்குச் சென்றுள்ளார். காரின் எரிபொருள் காட்டியில் ஏற்கனவே 5 லிட்டர் பெட்ரோல் இருந்த நிலையில், காரின் கொள்ளளவை முழுமையாக நிரப்புமாறு ஊழியர்களிடம் அவர் கூறியுள்ளார். பெட்ரோல் நிரப்பப்பட்ட பிறகு அவரிடம் வழங்கப்பட்ட ரசீதில் 52 லிட்டர் பெட்ரோல் நிரப்பப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டிருந்ததைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். காரின் மொத்த கொள்ளளவே 45 லிட்டர் மட்டுமே இருக்கும்போது, ஏற்கனவே 5 லிட்டர் இருக்கும் காரில் எவ்வாறு 52 லிட்டர் பெட்ரோல் நிரப்ப முடியும் என்று ஊழியர்களிடம் சரண் சிங் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
ஆரம்பத்தில் 41 லிட்டர் என்று காட்டிய ஊழியர்கள், பின்னர் இயந்திரத்தில் ஏதோ மாற்றம் செய்து கூடுதலாக 11 லிட்டர் சேர்த்து மொத்தம் 52 லிட்டர் என ரசீது தயாரித்து மோசடி செய்ய முயன்றதாகக் கூறப்படுகிறது. ஊழியர்கள் தொடர்ந்து மழுப்பலாகப் பேசியதால், சரண் சிங் உடனடியாகத் தனது கார் நிறுவனத்தின் அதிகாரியைப் பங்கிற்கே வரவழைத்தார். அங்கு வந்த அதிகாரி, தொழில்நுட்ப ஆவணங்களை ஆதாரமாகக் காட்டி இந்த மாடல் காரின் டேங்கில் 45 லிட்டருக்கு மேல் ஒரு சொட்டு பெட்ரோல் கூட நிரப்ப முடியாது என நிரூபித்தார். கார் நிறுவன அதிகாரி ஆதாரத்துடன் பொய் முகத்தைக் கிழித்ததும் பெட்ரோல் பங்க் நிர்வாகம் செய்வதறியாது திகைத்தது. இதுகுறித்து சரண் சிங் அளித்த புகாரின் பேரில், கான்பூர் மாவட்ட நிர்வாகம் அந்த பெட்ரோல் பங்க்கில் அவசர விசாரணை நடத்தி சீல் வைக்க உத்தரவிட்டுள்ளது.
