கேரள மாநிலம் காசர்கோடு பைவளிக்கே பகுதியில் 15 வயது சிறுமி கடந்த மாதம் திடீரென மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த சிறுமி, அதே பகுதியை சேர்ந்த 42 வயது ஆட்டோ டிரைவருடன் சென்றிருப்பது தெரிய வந்ததை தொடர்ந்து, பெற்றோர் உடனடியாக போலீசில் புகார் அளித்தனர். ஆனால், 25 நாட்கள் கடந்தும் சிறுமி பற்றிய எந்த தகவலும் கிடைக்காததால், மாணவியின் பெற்றோர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தனர். இதனை விசாரித்த நீதிமன்றம், மாயமான சிறுமியை உடனடியாக கண்டுபிடிக்க போலீசாருக்கு உத்தரவிட்டது.

இந்த உத்தரவினை தொடர்ந்து, போலீசார் தேடுதல் பணியை தீவிரமாக மேற்கொண்டனர். மாயமான இருவரின் செல்போன் சிக்னல்களை அடிப்படையாக வைத்து போலீசார் அவர்களைத் தேடினர். மேலும், அவர்கள் வீடு இருந்த பகுதியை ஒட்டிய வனப்பகுதியில் டிரோன் மூலம் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த தேடுதல் நடவடிக்கையின் போது, காட்டுப்பகுதியில் அந்த சிறுமியும், ஆட்டோ டிரைவரும் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சிறுமி மாயமானதை பற்றி போலீசில் புகார் அளித்தபோதும், அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், போலீசாரின் அலட்சியத்தால் சிறுமியின் உயிரிழப்பு ஏற்பட்டதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக, கேரள உயர்நீதிமன்றம் (Kerala High Court) போலீசாருக்கு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. மாணவிகள் மற்றும் பெண்கள் மாயமாகும் புகார்கள் வந்தவுடன், போலீசார் உடனடியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை தொடங்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், மைனர் குழந்தைகள் காணாமல் போனதாக புகார் அளிக்கப்படும்போது, விசாரணை அதிகாரிகள் போக்சோ (POCSO) சட்டப்பிரிவை மனதில் கொள்ள வேண்டும் என்றும், முதல் கட்ட விசாரணையில் புகாரின் செல்லுபடி தன்மையை ஆராய தேவையில்லை என்றும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து காவல்துறை விளக்க அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் மக்களிடையே போலீசாரின் செயல்பாடு குறித்து பெரும் கேள்விகளை எழுப்பியுள்ளது. தொடர்ந்து இவ்வகையான சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க, காவல்துறையின் செயல்பாடு மேலும் கண்டிப்பாக இருக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.