கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் கடந்த 40 நாட்களில் மட்டும் 23 பேர் மாரடைப்பால் உயிரிழந்துள்ள துயரமான தகவல் வெளியாகியுள்ளது. இதில் ஒரு சிறுவன் 19 முதல் 25 வயதுக்குட்பட்ட 6 இளைஞர்களும், 25 முதல் 45 வயதுக்குட்பட்ட 8 பேரும் உள்ளடங்குவர் என்பது மிகுந்த அதிர்வையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இந்தியா முழுவதும் மாரடைப்பு சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், நடனம் ஆடும்போது, ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் போது பல இளம் வயதினர் திடீரென உயிரிழக்கும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் அதிகம் பரவியுள்ளன. இதனால் மக்கள் மத்தியில் பெரும் பீதியான சூழ்நிலை நிலவுகிறது.

இதன் காரணமாக மைசூரில் உள்ள பிரபல ஜெயதேவா மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக நூற்றுக்கணக்கான மக்கள் வரிசையில் காத்திருப்பது ஒரு அன்றாடக் காட்சியாக மாறியுள்ளது. இதுபற்றி மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் கே.எஸ். சதானந்த் தெரிவித்தபோது, “மக்கள் ஊடகச் செய்திகளை பார்த்து பயந்து மருத்துவமனைக்கு வருகிறார்கள். ஆனால் ஒரே முறை பரிசோதனையை செய்தால் போதாது. அனைவரும் தங்களுக்கு அருகிலுள்ள மருத்துவமனையில் இதய பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். தவிர, வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் உடற்பயிற்சி தான் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க வழியாம்,” எனக் கூறினார்.

மருத்துவமனையின் மைசூர் மற்றும் பெங்களூரு கிளைகளில் நோயாளிகள் எண்ணிக்கை 8 சதவீதம் அதிகரித்துள்ளது. ஜூன் மாதத்திலிருந்து இந்த எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து, கர்நாடக முதல்வர் சித்தராமையா, மாரடைப்புகள் குறித்து விசாரணை குழு ஒன்றை அமைத்து, ஜெயதேவா இதய நோய் நிறுவன இயக்குநர் டாக்டர் கே.எஸ். ரவீந்திரநாத் தலைமையில் விசாரணை நடத்த உத்தரவிட்டார். ஹாசனில் ஏற்பட்ட மரணங்களை தனிப்பட்ட வழக்காக கொண்டு ஆய்வு செய்ய வேண்டும் என்ற பரிந்துரையும், சமீபத்தில் அரசுக்கு வழங்கப்பட்ட அறிக்கையில் இடம்பெற்றுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது. இதன் மூலம், இளம் வயதிலேயே ஏற்படும் மாரடைப்பை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் விரைவில் அமல்படுத்தப்படும் என நம்பப்படுகிறது.