தமிழகத்தில் திமுக ஆட்சியின் கீழ் பல்வேறு துறைகளில் சுமார் ரூ.4 லட்சம் கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றுள்ளதாகக் கூறி, அது குறித்த விரிவான புகார் மனுவை அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் இன்று சமர்ப்பித்தார்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெற்ற இந்தச் சந்திப்பிற்குப் பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, துறவாரியான ஊழல் பட்டியலை வெளியிட்டார்.
துறைவாரியான ஊழல் புகார்கள்
கடந்த 4½ ஆண்டு கால திமுக ஆட்சியில் நடந்துள்ள முறைகேடுகள் குறித்து அவர் வெளியிட்ட முக்கிய விவரங்கள்:
நகராட்சி நிர்வாகத் துறை ரூ. 64,000 கோடி
சென்னை மாநகராட்சி ரூ. 10,000 கோடி
தொழில் துறை ரூ. 8,000 கோடி
பள்ளிக்கல்வி மற்றும் வேளாண் துறை தலா ரூ. 5,000 கோடி
சமூக நலத்துறை ரூ. 4,000 கோடி
அறநிலையத்துறை மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை தலா ரூ. 1,000 கோடி
இளைஞர் நலன் & சுற்றுலாத் துறை ரூ. 750 கோடி
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளது. இதன் காரணமாக, தமிழகத்திற்கு வர வேண்டிய பெரும் முதலீடுகள் அனைத்தும் அண்டை மாநிலங்களுக்குச் சென்றுவிட்டன. நிர்வாகத் திறமையின்மையால் மாநிலத்தின் வளர்ச்சி முடங்கியுள்ளது,” என்று எடப்பாடி பழனிசாமி சாடினார்.
அனைத்து துறைகளிலும் முறைகேடுகள் மலிந்துள்ளதை ஆதாரங்களுடன் ஆளுநரிடம் சுட்டிக்காட்டியுள்ளதாகவும், இந்த ஊழல்கள் குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மொத்தமாக திமுக அரசு ரூ.4 லட்சம் கோடி ஊழல் செய்துள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ள இந்தச் சந்திப்பு, தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
