உத்தரப் பிரதேச மாநிலம் மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தில், பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற வான் ஒன்று, தகுதியற்ற ஓட்டுநரால் இயக்கப்பட்டது கண்டறியப்பட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
‘மிஷன் சேஃப் ஃபியூச்சர்’ என்ற சிறப்புப் பாதுகாப்பு சோதனையின்போது, அந்த வானின் ஓட்டுநர் விபத்தில் பாதிக்கப்பட்டு, தனது ஒரு காலைச் சரியாகச் செயல்பட முடியாத நிலையில் இருப்பது தெரியவந்தது.
பொதுமக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருந்த அந்த ஓட்டுநர், வாகனத்தின் கிளட்ச் அமைப்பில் ஒரு ஸ்டீல் பைப்பை வைத்து வண்டியை இயக்கி வந்துள்ளார்.
மேலும், அந்த வான் உரிய காப்பீட்டு ஆவணங்கள் மற்றும் பாதுகாப்பு குறியீடுகள் இன்றி இயக்கப்பட்டதும் விசாரணையில் அம்பலமானது. சுமார் நான்கு ஆண்டுகளாக இத்தகைய ஆபத்தான முறையில் வண்டி ஓட்டி வந்த ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில், அவரது ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனர்.
அந்த வாகனம் பறிமுதல் செய்யப்பட்டதுடன், மாணவர்களின் பாதுகாப்பு விஷயத்தில் இவ்வளவு பெரிய அலட்சியம் காட்டிய பள்ளி நிர்வாகத்தின் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு கல்வித் துறைக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
