மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்ட அரசு மருத்துவமனையில், எல்லோரையும் மூக்கில் விரல் வைக்க வைக்கும் வகையிலான ஒரு விசித்திரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. அந்தப் பகுதியைச் சேர்ந்த தாய் ஒருவர், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த தனது மகனுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளார்.
அப்போது, வீட்டைப் பூட்டிவிட்டு வரும்போது அங்கு வைக்கப்பட்டிருந்த 4 லட்ச ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளுக்குப் பாதுகாப்பு இருக்காது எனப் பயந்து, அந்த நகைகள் அனைத்தையும் ஒரு பையில் பத்திரமாக எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்கு வந்துள்ளார். மருத்துவமனை வளாகத்தில் தனது மகனுக்கு சிகிச்சை அளிப்பதற்கான நடைமுறைகளைத் தாய் கவனித்துக் கொண்டிருந்த நேரத்தில், எதிர்பாராதவிதமாக அங்கு வந்த தெருநாய் ஒன்று அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
தாய் வைத்திருந்த அந்த 4 லட்ச ரூபாய் மதிப்புள்ள நகைப்பையை, அவர் கண்ணெதிரே அந்த நாய் தன் வாயால் கவ்விப் பிடித்துக்கொண்டு அக்ரசிவ்வாக அங்ஙிருந்து தப்பி ஓடியுள்ளது. நகைப் பை கைநழுவிப் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அந்தத் தாய், ‘ஐயோ நகை போச்சே’ என்று கூச்சலிட்டு கதறி அழத் தொடங்கினார்.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அங்கிருந்த மக்கள் உடனே காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், மருத்துவமனை வளாகம் முழுவதும் உடனடியாகத் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். மேலும், அந்த நாய் நகைப்பையோடு எந்தப் பக்கமாக ஓடியது என்பதைக் கண்டறிய, மருத்துவமனையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி (CCTV) கேமரா பதிவுகளை மிகத் தீவிரமாக ஆய்வு செய்தனர்.
அதில் நாய் பையைக் கவ்விக்கொண்டு ஓடும் காட்சிகள் தெளிவாகப் பதிவாகியிருந்தது. சிசிடிவி காட்சிகளின் உதவியோடு நாய் ஓடிய பாதையைக் துல்லியமாகக் கணித்துத் பின்தொடர்ந்த காவல்துறையினர், தீவிரத் தேடுதலுக்குப் பிறகு அந்த நாயைக் கண்டுபிடித்தனர். அதனிடமிருந்த நகைப்பையை பத்திரமாக மீட்ட போலீசார், அதிலிருந்த 4 லட்ச ரூபாய் மதிப்பிலான நகைகள் அனைத்தும் பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்து, அதை மீண்டும் அந்தத் தாயிடம் ஒப்படைத்தனர்.
மருத்துவமனையில் நாயொன்று 4 லட்ச ரூபாய் நகையைத் தூக்கிச் சென்ற சம்பவமும், அதைச் சாமர்த்தியமாக மீட்ட காவல்துறையினரின் நடவடிக்கையும் அப்பகுதியில் பெரும் பர பரப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
